அகிலத்திரட்டு அம்மானை 4051 - 4080 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 4051 - 4080 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றுநான் வருவேன் இதுவரைக்குங் காத்திருங்கோ
நான்வந்த போது நல்லகதி யுங்களுக்குத்
தான்தருவேன் போகுமெனத் தங்களிரு பேர்களுக்கும்
விடைகொடுத்து ஸ்ரீரங்கம் மேவி யவரிருக்கத்
திடமுடனே போகமுனி தேவி சலமடவும்
வந்தந்த மாயவரின் வாழ்வெல்லாங் காத்திருந்தார்
சென்றந்த மாயவனார் ஸ்ரீரங்கமே யிருந்தார்
மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்கு மப்போது
மாயக்கலி செய்த மாயங்கே ளன்போரே
ஈசன் சக்தியையும் இணைபிரித்து வைத்தான்
தேசக்கலி சாதிதனைப் பதினெட்டாய் பிரித்து வைத்தான்
சாத்திரத்தை யாறாய்த் தான்வகுத்து வேதமதை
மாத்திரமே நாலாய் வகுத்தனன்கா ணம்மானை
நட்சேத் திரத்தை நல்லிருபத் தேழாகப்
பொய்ச்சேத் திரமாய்ப் பிரித்தான்கா ணம்மானை
கோளொன் பதுக்குக் கூடுபன்னி ரண்டாக
நாளேழு வாரம் நாட்டிவைத்தா னம்மானை
பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து
தக்கமது லோகம் தானாண் டிருக்கையிலே
மாந்திரத்தால் செய்த வறுமைகே ளன்போரே
பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான்
சந்திரனை மங்கவைப்பான் சமுத்திரத்தைப் பொங்கவைப்பான்
மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான்
கற்பைக் கலக்கிடுவான் கன்னி யழித்திடுவான்
வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத் தடுத்திடுவான்
ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான்
கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை
பசுவை யடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான்
கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான்
மிருகமதைக் கட்டி இரையிடாக் கொன்றிடுவான்

விளக்கவுரை :

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi