அய்யாவழி

அய்யா வழி

அய்யா வழி, என்பது  இறைவன் அய்யா வைகுண்டர் உலகமக்களுக்கு கூறிய மனித வாழ்வியல் முறைகளாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும்.

அய்யா வழி பலவிதங்களில் இந்து சமயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அய்யா வழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விவரம் இல்லை. அய்யா வழியினர் கூடி "அகிலத்திரட்டு" வாசித்து ஒன்றாக கலந்து வணக்கம் செலுத்தும் இடங்களின் பெயர் 'பதி' மற்றும் 'தாங்கல்' என அழைக்கப்படுகிறது. சாமிதோப்பில் அமைந்துள்ள பதியின் கிணற்றில் அனைத்து சாதியினரும் சேர்ந்து குளிக்க, அதே கிணற்று தண்ணியை எடுத்து சமைத்து சேர்ந்து உணவருந்த என சாதிபேதமற்ற வழிமுறையை உருவாக்கினார் அய்யா வைகுண்டர்.

அய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட வழிபாடாகவும் கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்தி விட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர். மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவோடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லமல் சமுதாயப் பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யா வழியோ அவ்வாறல்ல. அது தானாக எழுந்து தன்னைத் தானே நிலைபடுத்திக் கொண்டது இதற்காக தலைவர் என்று அய்யா வைகுண்டர் யாரையும் நியமிக்கவில்லை.

ஆண் பெண் சம உரிமை :

அய்யா வழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன.

அய்யா வழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக சமய ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப் படுகின்ற போதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும்.

அப்பகுதிகளில் அய்யா வழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. அய்யா வழியின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யா வழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.

அய்யா வழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும், சில சமயச் சடங்குகளும் இந்து சமயத்துடன் ஒத்திருக்கின்ற போதிலும், பெரும்பாலும் வேறுபட்ட கருத்துக்களே அதிகமாக வெளிப்படுத்தப் படுகின்றன. குறிப்பாக தீய சக்தி, தர்மக் கோட்பாடு போன்றவற்றில் அய்யா வழி இந்து சமயத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது.

அய்யா வழி வரலாறு


இறைவன் மஹா விஷ்ணுவே திருச்செந்துார் கடலுக்குள்ளிருந்து அய்யா வைகுண்டராக மனு அவதாரம் செய்தார் என்று அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. அய்யா வைகுண்டரின் உபதேசங்களையும் வழிகாட்டுதல்களையும் பின்பற்றுதலே அய்யா வழியாகும் அய்யா வைகுண்டரின் அவதார காலத்தில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யா வழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன.

ஆரம்ப காலத்தில் அய்யா வழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் தற்காலத்தில் மற்றவா்களும் சாதிபேதம் பாக்காமல் அதிகமானோர் இவ்வழியை பின்பற்றி வருகிறார்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக் கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின் (தற்போதைய தெற்கு கேரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக் கண்டது.

அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யா வைகுண்டரின் போதைனகள்,  அய்யா வழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் வழியாக உலகத்திற்கு பரப்பப்பட்டது. அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத் தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொரு புறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன. இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கோன்மை இங்கு இருந்து வந்ததால் சமயக் கட்டைமப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமூக வரலாற்றில் தனிமனித உரிமைகைள நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டாயத்திலிருந்தது.

தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக் கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தைகய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள் கலப்பை செயல்படுத்தியது அய்யா வழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும்.

அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு் விடுமுறை அளித்து வருகின்றது.

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar