திருவிழாக்கள்

திருவிழாக்கள்

அய்யாவழி மக்களின் தலைமைபதியாகிய சாமித்தோப்பு பதியில் ஆவணி, தை, வைகாசி  ஆகிய மாதங்களில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மாசி 20-ம் நாள் அய்யா  வைகுண்டரின் அவதாரத்திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பதியில் உள்ள முத்திரிபதம் என்னும் தீர்த்த கிணறு, சிறப்பு பெற்றதாகும். ஆராதனை,  அபிஷேகம் இல்லாத அய்யா வழிபாட்டு முறைக்கு இத்தீர்த்த பதத்தை தெளிப்பதன்  மூலம் அனைத்து சிறப்பும் நிறைவு  பெற்றுவிடுவதாக நம்பப்படுகிறது.

இந்த தீர்த்தம் அருமருந்து என்றும் போற்றப்படுகிறது. முண்டாசு கட்டி தீப  நாமமிட்டு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பதிகளுக்கு வந்து  வழிபடுகின்றனர். மேலும் சாமித்தோப்பு தலைமைபதியின் கருவறைக்குள் ஒரு  கட்டில் போடப்பட்டுள்ளது. அதன்மேல் அகிலத்திரட்டு மூலச்சுவடி  வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த கட்டில்  மாற்றப்படும். ஏனென்றால்  பழைய கட்டில் முற்றிலும் கிழிந்திருக்கும். இக்கட்டிலில் அய்யா வைகுண்டர்  வந்து உறங்குவதாக அய்யா வழி மக்கள்  நம்புகிறார்கள்.

சுவாமித்தோப்புப் பதியில் திரு ஏடு வாசிப்புத் திருவிழா தொடங்கும் அன்று அம்பலப்பதி, முட்டப்பதி, பூப்பதி, தெட்சணத்துத் துவாரகாபதி, வாகை பதி போன்ற பதிகளில் நடைபெறுகின்றது. தென்தாமரைகுளம் பதியில் இருந்து திருஏடு இப்பதிகளுக்குக் கொண்டு  செல்லப்படுவதில்லை.
  
பூப்பதியில் பத்து நாட்களோ, பதினைந்து நாட்களோ திரு ஏடு வாசிப்புத் திருவிழாவை  மேற்கொள்கின்றனர். அம்பலப்பதியில் பதினேழு நாட்களும் துவாரகா பதியில் (ஐப்பசி முதல் வெள்ளி) பதினேழு நாட்களும் திருஏடு வாசிப்புத் திருவிழா  நடத்தப்பெறுகின்றது. வாகை பதியிலும் பதினேழு நாட்கள் திரு ஏடு வாசிப்புத்  திருவிழா நடைபெறுகின்றது.

பத்து நாட்கள் எனில் எட்டும் ஒன்பதும் நாட்கள் திருக்கல்யாண ஏடு  வாசிப்பாகக் கொள்கின்றனர். பத்து நாட்கள் நடைபெறுவதாக இருந்தாலும் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெறும் வண்ணம் திருஏடு  வாசிப்புத் திருவிழாவை நடத்துகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள் வேதங்களைத் தொடவும், கேட்கவும், படிக்கவும் தடை  விதிக்கப்பட்ட காலகட்டத்தில் அய்யா வைகுண்ட சுவாமிகள் அய்யா வழி மக்களின்  புனித நூலாக அகிலத்திட்டு அம்மானையை  வழங்கிச் சென்றார் என நம்பலாம். இகனை மணம் அய்யா வைகுண்டர் பெண் தெய்வச்  சக்திகளைத் தன்னோடு இணைத்துக் கொள்ள என்று கூறுகின்றனர்.

ஆண்டுத் திருவிழாக்கள்

பதிகளில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாக்களை ஐந்தாக வகைப்படுத்தலாம். அவை

1. ஆவணித் திருவிழா
2. தை திருவிழா
3. வைகாசித் திருவிழா
4. அவதாரத் தினவிழா
5. ஏடுவாசிப்புத் திருவிழா என்பனவாகும்.

ஆவணித் திருவிழா

ஆவணி  மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஒன்றாம் திருவழா  ஆரம்பமாகிறது. திருவழா நாட்களில் அன்பர்கள் கூட்டம் அதிகமாகக்  காணப்படுகிறது. எப்பொழுதும் போல் தின வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது.  ஒன்றாம் திருவிழா அன்று அதிகாலை ஒன்பது மணியளவில் தலைமை அடிகளார் அவர்களால் கொடி மரத்தில் கொடி ஏற்றப்படுகின்றது. அப்பொழுது வாண வேடிக்கைகள்  நடைபெறுகின்றன.

ஒன்றாம்  திருவிழா முதல் ஏழாம் திருவிழா வரை ஏழு ஊர்களிலிருந்து சாதி, மத, இன வேறுபாடுகளின்றி வீடுகள் தோறும் பிச்சை எடுத்து (யுகார குரு பிச்சை),  அப்பொருட்களைக் கொண்ட எட்டாம் திருவிழா அன்று பெரிய உகப்படிப்பு என்னும்  வழிபாட்டுப் பாடலைப் படித்து மகா அன்னதானம் நடைபெறுகின்றது (எட்டாம்  திருவிழா அன்று நடைபெறும் அன்னதானத்திற்குப் பிச்சையாக அரிசி, நெல், காசு,  காய்கறிகள் என தங்களிடம் இருப்பதைக் காணிக்கையாக எல்லா இன, சாதி, மத  மக்களும் அளிக்கின்றனர்).

திருவிழா தினங்களில் தொட்டில் வாகனம், காளை வாகனம், அன்ன வாகனம், கருட  வாகனம், குதிரை வாகனம், அனுமார் வாகனம், இந்திர விமான வாகனம், நாற்காலி  பவனியும் முதலிய வாகனப் பவனிகள் நடைபெறுகின்றன. இவ்வாகனப் பவனிகள் காலை,  மாலை வேளைகளில் நடைபெறுகின்றன. அய்யா வகான பவனி வருதல் தினமும்  சங்கொலியுடனும், வெண்கல மணியொலியுடனும் நடைபெறுகின்றது. அய்யாவின் வாகனப்  பவனிக்குப் பின்னரே ஏனை வாகனகங்கள் பவனி வருகின்றன.

முதல் நாள் திருவிழா வாகனப் பவனியின்போது தொட்டில் வாகனப் பவனியும்,  இரண்டாம் நாள் திருவிழா அன்று நாற்காலி பவனியும், மூன்றாம் நாள் திருவிழா  அன்று அன்ன வாகனப் பவனியும் நிகழ்கின்றது.

அன்ன வாகனப் பவனிக்கு வாகனத்தை வெண்மை வண்ண மலர்களால் அலங்கரிக்கின்றனர்.  நான்காம் நாள் திருவிழா அன்று சர்ப்ப வாகனப் பவனியும், ஐந்தாம் நாள்  திருவிழா அன்று அய்யா வைகுண்டர் வாகனப் பவனி  நடைபெறுகின்றது. இவ்வாகனப்  பவனிக்கு வாகனத்தை பச்சை வண்ணத்தால் அலங்காரம் செய்கின்றனர்.

ஆறாம் திருவிழா அன்று நாக வாகனப் பவனியும், ஏழாம் திருவிழா அன்று கருட  வாகனப் பவனியும் நடைபெறுகின்றது. கருட வாகனப் பவனிக்கு வாகனத்தைச் சிவப்பு  வண்ணத்தால் அலங்காரம் செய்கின்றனர்.

எட்டாம் திருவிழாவை மிக முக்கியத் திருவிழாவாக அய்யா வழி அன்பர்கள்  கருதுகின்றனர். எட்டாம் திருவழா அன்று குதிரை வாகனப் பவனி சிறப்பாக  நடைபெறுகின்றது. இவ் வாகனப் பவனி நிறைவு பெற்றவுடன் அய்யா வைகுண்டர்  முத்திரிக் கிணறு வந்து கலியை வேட்டையாடும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது.  இந்நிகழ்ச்சிக்கு அம்பையும் வில்லையும் பயன்படுத்துகின்றனர். அதன் பிறகு  பக்தர்கள் முத்திரிக் கிணற்றின் புனித நீரை அருந்துகின்றனர்.

பின்னர் செட்டிவிளை, சாஸ்தான் கோவில் விளை, சோட்டாபணிக்கன் தேரிவிளை,  காமராஜபுரம் போன்ற ஊர்களை நோக்கி ஊர்வலம் நடைபெறுகின்றது. இவ்  ஊர்வலத்தின்போது தெருவோரங்களிலும், சாலையோரங்களிலும் கூடியிருக்கும் மக்கள்  அய்யா வைகுண்டருக்குப் பணிவிடை பொருட்களை வைத்துச் சிறப்பிக்கின்றனர்.  ஊர்வலம் இறுதியாக தலைமைப் பதியின் வடக்கு வாசலை வந்தடைந்தவுடன் ஊர்வலம்  நிறைவடைகின்றது. அதன் பின்னர் மகா அன்னதானம் நடைபெறுகின்றது.

ஒன்பதாம் திருவிழா அன்று அனுமான் வாகனப் பவனி நடைபெறுகின்றது. பத்தாம்  திருவிழா அன்று இந்திர வாகனப் பவனி நடைபெறுகின்றது. இவ்வாகனப் பவனிகள்  மிகவும் சிறப்பாக நடைபெறுவதால் இதனைப் பார்க்க அதிகமான பக்தர்கள் ஆர்வமுடன்  வருகின்றனர்.

பத்தாம் திருவிழா அன்று நள்ளிரவு, இந்திர வாகனப் பவனி நடைபெறுகின்றது.  இத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிகழ்வதால் அய்யா வழி அன்பர்களால் இத்திருவிழா  சிறப்புமிக்கதாகக் கருதப்படுகின்றது. இவ்வாகனப் பவனியின்போதும் மிகுதியான  பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

பதினொன்றாம் திருவிழா அன்று இரதத் திருவிழா நடைபெறுகின்றது. அன்று  சுவாமித்தோப்புப் பதியின் இரதம் மிகவும் அழகாக அலங்கரிக்கின்றனர். மதியம்  பன்னிரண்டு மணிக்கு வாகனப் பவனி ஆரம்பமாகிறது. அனைத்துத் தெருக்களிலும்  வாகனப் பவனி நடைபெறுகின்றது. இவ்வாகனப் பவனி சரியாக ஐந்து மணிக்கு  நிறைவடைகின்றது.

சுவாமித் தோப்புப்பதி

ஒவ்வொரு  ஆண்டும் ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமையும், தை மாதம் முதல் வெள்ளிக்கிழமையும், வைகாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையும்  என ஆண்டிற்கு மூன்று முறை பதினோரு நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன்  கொண்டாடப்படுகின்றன. இவ அல்லாமல் கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை ஏடு வாசிப்புத் திருவிழா பதினேழு நாட்களும், மாசி பத்தொன்பதில் அவதாரத்  தினவிழாவும் ( மார்ச் 3 ) கொண்டாடப்படுகின்றன.

மாதப் பணிவிடை
இந்து மதத்தினர் மாதத்தின் கடைசி செவ்வாய் அல்லது வெள்ளி மற்றும்  சனிக்கிழமைகளைச் சிறப்பான நாளாகக் கருதி சிறப்பு வழிபாடுகளை  மேற்கொள்கின்றனர். பதிகளில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று தினவழிபாடு போன்று அதிகாலையில்  திருநடை திறப்பு சங்கொலி, வெண்கல மணி அடித்தல், வாகனப்பவனி,  போன்ற  சடங்குகள் நடைபெறுகின்றன. அன்று அன்னப்பால் வைபவம் ( பால் வைப்பு )  சிறப்பாக நடைபெறுகின்றது.

அய்யா வைகுண்டர் அவதாரம் எடுத்த தினம் என்பதால் வார, மாத   ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். சுவாமித்தோப்புப்  பதியில் மட்டுமல்லாது ஏனைய பதிகளிலும் தமிழ் மாதத்தின் முதல்  ஞாயிற்றுக் கிழமையைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

சுவாமித்தோப்புப் பதியில் மட்டுமல்லாது ஏனைய பதிகளிலும் அன்பர்கள் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறன்று ஏராளமாகக் கூடுகின்றனர். அம்பலப்பதியில் ஒவ்வ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையைச் சிறப்பான நாளாகக் கொண்டாடுகின்றனர்.

வாரப் பணிவிடை

வாரத்திற்கு  ஒருமுறை சிறப்பாக பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு வாரம் ஒருமுறை  நடைபெறும் வழிபாட்டை வார வழிபாடு என்று கூறுகின்றனர்.

பதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வழிபாட்டை வார வழிபாடு என்று  அழைக்கின்றனர். அன்று வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. அய்யா வைகுண்டர்  திருமாலின் அவதாரமாக அவதரித்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அய்யா வழி  மக்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதாகக் கூறுகின்றனர். இந்நாளை அவர்கள்  புனிதமான நாளாகவும் கருதுகின்றனர்.

அதிகாலை மூன்று மணிக்கு திருநடை திறக்கப்படுகின்றது. தின வழிபாட்டைப்  போன்றே ஒருவர் சங்கொலியை முழக்கிய படியும், வெண்கல மணியை அடித்தபடியும் பதி  தெருக்களில் வலம் வருகின்றார். அவரோடு அதிகமான மக்களும் ஊர்வலத்தில்  கலந்து கொள்கின்றனர்.

பின்னர் தின வழிபாட்டில் நடைபெறுவது போன்ற சடங்கு முறைகள் நடைபெறுகின்றன.  தின வழிபாட்டை விட இவ் வார வழிபாட்டில் அன்பர்கள் அதிகமாகக் கலந்து  கொள்கின்றனர். ஞாயிற்றுக்கிழமையும்  மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகின்றது. அய்யா வைகுண்டர் பதிகளில்  நடைபெறும் அன்ன தருமம் எவ்வித சாதி, மத, பொருதார வேறுபாடுகள் இன்றி சமபந்தி  போஜனமாக நடைபெறுகின்றது.

அம்பலப்பதியில் மட்டும் செவ்வாய்க்கிழமையையும் சிறப்பு நாளாகக் கொண்டாடுகின்றனர்.  அதற்குக் அவர்கள் கூறும் காரணம் அம்பலப்பதியில் அய்யா வைகுண்டரோடு வீற்றிருக்கும் அம்மைக்குச் செவ்வாய்க்கிழமை உகந்த நாள் என்பதால் செவ்வாய்க்கிழமை அன்று சிறப்பு வழிபாடு மேற்கொள்கின்றனர் என்று  கூறுகின்றனர்.

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar