அகிலத்திரட்டு

அகிலத்திரட்டு அம்மானை

இது அய்யா வைகுண்டரின் சீடர்களில் ஒருவரான அரிகோபாலர் என்ற சீடர் மூலம் உலகத்திற்கு கிடைக்கப்பெற்றது.

அகிலத்திரட்டின் முதல் பகுதி மும்மூர்த்தி, தேவர்கள் என பல கடவுளர்களையும் அவர்களின் ஆளுமை ஏற்றத் தாழ்வுகளையும், பின்னர் இரண்டாம் பகுதியில் அனைத்து தெய்வச் சக்திகளையும் அடக்கும் ஆளுமையுடன் வைகுண்டர் அவதாரம் எடுக்கின்ற போதும், அனைத்து தேவர்களும் தனித்தனியாக இருந்து இயங்கி வருகிறர்கள் (வைகுண்டரின் ஆளுமைக்கு உட்பட்டு). அனைத்து தெய்வ சக்திகளும் வைகுண்டரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்ற போதும் வைகுண்டரின் அவதார காலகட்டம் முழுவதும் நாராயணர் வைகுண்டரின் உள்ளாகவும், வைகுண்டரின் தந்தையாகவும் இரட்டைத் தன்மையுடம் இயங்குகிறார். அதனால் அகிலம் பல கடவுளர்களின் இருப்பை ஒத்துக்கொள்கிறது. ஆனால் வைகுண்டரை அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகவும், அனைத்து தெய்வ சக்திகளை உள்ளடக்கியவராகவும் காண்கிறது.

கடவுள் மிக உயர்ந்த நிலையில் ஒன்றாகவும், ஒப்பற்றதாகவும், உருவமற்றதாகவும், மாறிலியாகவும், அனைத்தையும் இயக்குவதும் மறுமுனையில் அனைத்தாக இயங்குவதும், காலம் - இடம் என்னும் வரையறைக்கு அப்பாற்பட்டவராகவும் இருக்கிறார் என அகிலம் கூறுகிறது. ஏகம் என்னும் பதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அகிலத்தின் துவக்கம் முதல் இறுதி வரை கூறப்படுகிறது. ஆனால் மிக உயர்ந்த கருத்தியலாக கருதப்படும் இப்பதத்திற்கு வேறு எந்த நேரடி தனி விளக்கமும் கொடுக்கப் படவில்லை. ஆனால் இப்பதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக மட்டும் அகிலம் முழுவதும் கூறப்படுகிறது. இப்பதம் தமிழில், "ஒன்று, ஒப்பற்றது" என்று விளக்கம் பெறுகிறது. ஆக, ஏகம் என்னும் இப்பயன்பாடு இறைசக்தி தொடர்பாக அய்யா வழியில் காணப்படும் ஒருமைக் கோட்பாட்டு விளக்கமாக கருதப்படுகிறது. இவ்வேகத்தின் கீழ்னிலை தெய்வசக்திகளாக பல கடவுளர்கள் கூறப்படுகின்றது

அதே வேளையில், அய்யா வைகுண்டர் அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஏகத்தின் அவதாரமாக அகிலம் கூறுகிறது. ஆனால் மறுமுனையில், வைகுண்டர் கலி மன்னனால் கைதுசெய்யப்படும் இடத்தில் அவர் சான்றோரை தேற்றும் விதமாக அமைந்திருக்கும் அடிகளில் வைகுண்டரே ஏகத்தை படைத்ததாக கூறுகிறார். இக்கோணத்தில் வைகுண்டர் ஏகத்துக்கும் அப்பற்பட்ட முழுமுதல் சக்தி எனப்படுகிறார்.

அவதார மும்மையை பொறுத்த வரையில் வைகுண்டரின் உள்ளே மூன்றில் ஒன்றாக ஏகம் இருப்பதால் ஏகத்தின் அனைத்து குணங்களும் வைகுண்டருக்கும் பொருந்தும். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அருள் நூலின் பல அடிகள் வைகுண்டரை முழுமுதலாக கூறுவதோடு அவரின் விஸ்வ-ரூபத்தினை வெளிப்படுத்துகிறது.

அகிலத்திரட்டில் இருபொருள் வாதம்

நீடிய யுகத்தில் தோன்றிய குறோணி, ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்வரும் யுகங்களில் அவை ஆறும் அழிக்கப்பட்டு இறுதியில் கலியன் நடுத்தீர்வை செய்யப்பட்டு நரகத்தில் தள்ளி கதவடைக்கப் படுவதாக அகிலம் கூறுகிறது. இதன் மூலம் அய்யா வழி இருபொருள் வாதத்தை வலியுறுத்துவது போன்றதொரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் கலி என்பது மாயை என்று வர்ணிக்கப்படுவதால் மாயையின் அழிவே அவ்வாறு கூறப்படுவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் அகிலம் தொடக்கம் முதலேயே அடிப்படை ஒருமையாகிய ஏகத்தை கூறி வருவதால், இது இருபொருள் வாதக் கோட்பாட்டை மங்கச்செய்கிறது.

சான்றோர்கள்

அகிலத்திரட்டின் படி சான்றோரின் சகாப்தம் துவாபர யுகத்தின் நிறைவுடன் துவங்குகிறது. அயோத அமிர்தவனத்தில் நாராயணரால் சப்த கன்னியருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளும் அவர்களது வம்சாவளியினரும் இவ்வாறு சான்றோர் என அழைக்கப்படுகின்றனர்.

அகிலத்திரட்டின் படி இச்சான்றோர் என்னும் பதம் தற்போது அய்யாவழியில் சமய ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இரு கோணத்தில் பயணிக்கிறது. இன்று பெரும்பாலும் அய்யாவழியினரின் பார்வை சான்றோர் விடயத்தில் சமய ரீதியாகவே இருக்கிறது. இப்பார்வை மூலம், தமிழ் இலக்கியங்களில் இப்பதத்தின் பயன்பாடுகளைக் கொண்டும், அகிலத்திரட்டின் சில அடிகளை மையமாகக் கொண்டும், "எவர் ஒருவர் நீதியாக வாழ்கிறாரோ", "எவர் ஒருவர் (அனுபவத்தில்) இறைவனை காணும் தகுதி பெறுகிறாரோ" அவர் சான்றவர் என்னும் பரந்த அடிப்படையினாலான உலகளாவிய பார்வையை முன்வைக்கப்படுகிறார்.

ஆனால் இச்சான்றோர் இவ்வுகத்தின் முதல் மக்களினம் என்னும் கருத்து அகிலத்தில் மேலோங்குவதால், இப்பார்வையில் சாணார் எனப்படுபவர்கள், தற்போது தமிழகத்தில் வாழும் நாடார் இனம் என்னும் பார்வை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் ஆதி காலத்தில் வாழ்ந்த, அரேபியர்களால் அல் ஹிந்த் என்றும் விவிலிய காலகட்டங்களில் பஞ்ச நதிகளின் மக்களினம் என்றும் அழைக்கப்பட்டவர்களும், 250 மேல் பிரிவுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் இன்று சிதறுண்டு கிடக்கும் மக்கள் என்று கொள்ளுதலே பொருத்தமானதாகும். அகிலத்தின் ஆதிச்சாதி போன்ற பயன்பாடுகள் இதற்குச் சான்று.

ஆனால் மறுபுறம் அய்யாவின் போதனைகளும், அகிலத்திரட்டின் செய்திகளும் சாதி முறையை கடுமையாக கண்டிப்பதாலும் இக்கோணத்தாலான சமுதாய்ப் பார்வையை அகிலம் ஏற்றுக் கொள்ள வில்லை என்றே பரவலாக கருதப்படுகிறது.

தத்துவப் பின்புலம்

அகிலத்திரட்டு அம்மானை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழிய நடையில் உயர்ந்த தத்துவங்களையும் மனிதவாழ்வியல் முறைகளையும் கதை ரூபத்தில் வழிப்படுத்தியிருக்கும் நூலாகும். மேலும் தினமொருநேரம் எந்தன் திரு மொழியதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் என்கிறது அகிலம். அகிலத்திரட்டு சித்தர் பரிபாஷையில் இயற்றப்பட்ட நூலாகும். இதில் காணப்படும் 'ஏரணியும் மாயோன்', உச்சிச் சுழி', 'மூக்குச் சுழி', 'முச்சுழி', 'லலாடம்', 'மேலக்கால் மண்டபம்', 'கொண்டையமுது', 'அகங்காணும் பாந்தள்' போன்ற பயன்பாடுகள் இதற்கு சிறந்த சான்றுகளாகும்.

ஆறு துண்டுகளாக வெட்டப்படும் குறோணி எனப்படுவது, மனித உடலின் ஆறு அகப்பகைகள் எனவும், அவைகளை கடந்து சகஸ்ராரப் பகுதியில் இறைவனை முழுமையாக உணர்வது தான் தர்மயுகம் என்பது அய்யாவழி தத்துவ வாதிகளின் கருத்து. மேலும் அய்யா வழி ஒரு அடிப்படை ஒருமை கோட்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் காணும் அனைத்தும் ஒன்று என்றும், இங்கு காணப்படும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு ஒருமை என்னும் முழுமுதற்பொருள் இருப்பதாகவும் அகிலத்திரட்டு கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் திருவாசகம் இவ்வொருமையிலிருந்து பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவானதாகக் கூறுகிறது. மேலும் அகிலத்திரட்டு மனிதப் பிறவிக்கும் ஏனைய பிரபஞ்சத்திற்கும் ஒரே உற்பத்தி விதியை கூறுவதாகத் தெரிகிறது.

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar