நிழல் தாங்கல்கள்

நிழல் தாங்கல்கள்

பதிகளும் நிழல்தாங்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத் தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டரே நேரடியாக சென்று அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

தாங்கல்கள் அனைத்தும் தலைமைப் பதியான சுவாமித்தோப்புப் பதியைப் பின்பற்றியே செயல்படுகின்றன. தாங்கல்களில் பணிவிடைகளை மேற்கொள்பவர்கள் வாரம் ஒருமுறையோ, மாதம் ஒருமுறையோ தங்கள் வசதிக்கேற்றவாறு தலைமைப் பதிக்குச் சென்று வருகின்றனர். அவதார தின விழாவிற்கு அனைவரும் கண்டிப்பாக தலைமை பதிக்குச் சென்று அய்யா வைகுண்டரை வழிபடுவதை தங்கள் வாழ் நாள் கடமையாக்க் கருதுகின்றனர். ஏனைய திருவிழாக்களின்போதும் வசதிக்கேற்றவாறு தலைமைப் பதிக்குச் சென்று அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். அவ்வாறு செல்ல இயலாதவர்கள் தாங்கல்களிலேயே தங்கள் வழிபாட்டைச் செய்கின்றனர். தலைமை பதியையே தங்கள் புனிதத் தலமாகக் கருதகின்றனர்.

தாங்கல்கள் அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் பரப்பும் இடங்களாகவும், தர்மச் சாலைகளாகவும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இடங்களாகவும், சாதி, இனம் கடந்து மனித நேயத்தை வளர்க்கும் இடங்களாகவும் விளங்குகின்றன என்பதில்  ஐயமில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகம் தலித்துகள் தாங்கல்களைத் தொடங்கி அய்யாவின் புகழைப் பரப்பி வருகின்றனர் எனலாம். பல தாங்கல்களில் கணக்குச் சொல்லுவது சிறப்பிடம் பெறுகின்றது. சில தாங்கல்களில் கணக்குக் கூறுவதில்லை.

தாங்கல்களில் நடைபெறும் வழிபாடுகளை நான்காக வகை செய்யலாம். அவை,

1. தினப் பணிவிடை
2. வாரப் பணிவிடை
3. மாதப் பணிவிடை
4. ஆண்டுப் பணிவிடை (திருவிழா) என்பனவாகும்.

1. தினப் பணிவிடை

    பதிகளைப் போன்றே அனைத்துத் தாங்கல்களிலும் தின வழிபாடு நடைபெறுகின்றது. சில தாங்கல்களில் அவற்றின் வசதிக்கேற்ப தின வழிபாடு காலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும், சில தாங்கல்களில் காலை, மாலை என இரண்டு வேளையும் நடைபெறுகின்றன. பல தாங்கல்களில் காலை அல்லது மாலை என அவர்களின் வசதியைப் பொறுத்து ஒரு வேளை மட்டுமே தின வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு ஒரு வேளை மட்டுமே தின வழிபாடு நடைபெறும் தாங்கல்களில் தனியாகப் பணிவிடைக்காரர்கள் இருப்பதில்லை. அங்கு தாங்கல்கள் நிறுவிய அன்பர்களே பணிவிடைக்காரர்களாகச் செயல்படுகின்றனர். இவர்களில் பலர் கூலி வேலை பார்ப்பவர்களாகவும் அரசாங்க வேலை பார்ப்பவர்களாகவும் இருப்பதால் அவர்களால் மூன்று வேளை பணிவிடை செய்ய சாத்தியமில்லாமல் போகின்றது.

பெரிய தாங்கல்கள் அனைத்திலும் மூன்று வேளை பணிவிடை நடைபெறுகின்றது. தங்கள் பொருளாதார வசதிகளுக்கேற்ப தாங்கல்களில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். வசதியான தாங்கல்களில் நித்தியப்பால், தவணைப்பால் போன்றவை வழங்கப்படுகின்றன.

பொருளாதார வசதி குறைவான தாங்கல்களில் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் தாங்கலைச் சுத்தம் செய்து கண்ணாடி முன்பு திருவிளக்கை ஏற்றி வைத்து வழிபடுகின்றனர். அனைத்துத் தாங்கல்களிலும் காலை, மாலை வேளைகளில் தாங்கல்களைச் சுத்தம் செய்து கண்ணாடி முன்பு திருவிளக்கு ஏற்றி வழிபடும் வழிபாடு தவறாமல் நடைபெறுகின்றது.

தனியாகத் தாங்கல்கள் வைக்காமல் வீடுகளில் வைக்கப்படும் தாங்கல்கள் வீட்டின் ஒரு தனி அறையில் கண்ணாடியும், திருவிளக்கும் வைத்து அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். தலித்தின மக்களில் தாங்கல்கள் வைக்க இயலாதவர்கள் வீடுகளில் இதுபோல் தாங்கல்கள் வைத்து அய்யா வைகுண்டரை வழிபடுவதோடு கணக்கும் கூறி வருகின்றனர். இவர்களை அடியொற்றி இவர்களது வாரிசுகள் பலரும் அய்யா தாங்கல்களைத் தொடங்கி வழிபட்டு வருவதையும் பார்க்க முடிந்தது. இங்கும் தினம் அதிகாலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும் வழிபாடாக இல்லாமல் திருவிளக்கு ஏற்றி வீட்டிலுள்ளவர்கள் அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர்.

எந்த வேலையைத் தொடங்குவதற்கு முன்னரும் அய்யா வைகுண்டரை வழிபட்டு விட்டே இவர்கள் தங்கள் வேலையைத் தொடங்குகின்றனர். தனியாக அறை இல்லாதவர்கள் வசதியான ஒரு இடத்தில் குறிப்பாகத் தென் மேற்கு மூலையில் அய்யா வைகுண்டரை வழிபடுகின்றனர். இதற்கான காரணமாக அவர்கள் அத்திசை கன்னி மூலை என்று கூறுகின்றனர். எனவே அய்யா வைகுண்டரை அங்கே வைத்து வழிபடுகின்றோம் எனக் கூறுகின்றனர்.

2. வாரப் பணிவிடை

வாரத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமையை அனைத்துத் தாங்கல்களிலும் சிறப்பு நாளாகக் கருதி கொண்டாடுகின்றனர். பல தாங்கல்களில் காலை, நண்பகல், மாலை என மூன்று வேளையும் சிறப்பாகப் பணிவிடை மேற்கொள்ளப்படுகின்றது.

பெரிய தாங்கல்களில் அய்யா வைகுண்டரின் கொள்கைகள் குறித்துச் சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லாது கணக்குக் கூறும் நாட்களான செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும் சிறப்புப் பணிவிடைகள் நடைபெறுகின்றன. கணக்குக் கூறும் தாங்கல்களில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களும் சிறப்பாகப் பணிவிடைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல தாங்கல்களில் அதிகாலை ஐந்து மணிக்கே திருநடை திறக்கப்பட்டு பணிவிடைகள் நடைபெறுகின்றன. பிரசாதமாக நித்தியப்பால் வழங்கப்படுகின்றது. இத்தினங்களில் ஏராளமான மக்கள் கணக்குக்க் கேட்பதற்காக தாங்கல்களில் வந்து காத்திருந்து அய்யா வைகுண்டரின் அருள் வாக்குகளைக் கேட்டுச் செல்கின்றனர்.

3. மாதப் பணிவிடை


ஒவ்வொரு தாங்கல்களும் தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்பு நாளாகக் கருதுகின்றனர். ஆகவே அன்றைய தினம் சிறப்புப் பணிவிடைகளை மேற்கொள்கின்றனர். சில தாங்கல்களில் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையும், நான்காவது ஞாயிற்றுக்கிழமையையும் சிறப்பான நாளாகக் கருதிப் பணிவிடைகளை மேற்கொள்கின்றனர். இதற்கான காரணமாக அவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலியே அய்யா வைகுண்டர் பல அற்புதங்களைச் செய்துள்ளார் மேலும் அய்யா வைகுண்டருக்கும் ஞாயிற்றுக்கிழமைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்றும் கூறுகின்றனர். அதனாலேயே தாங்கள் மாத்தில் முதல் அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையைச் சிறப்பான நாளாகக் கருதி பணிவிடை மேற்கொள்கிறோம் என்று கூறுகின்றனர். இன்னும் சிலரோ எங்கள் முன்னோர்கள் முதல் அல்லது மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பணிவிடை மேற்கொண்டனர். அதைப் பின்பற்றியே நாங்களும் மேற்கொள்கிறோம் என்றும் கூறுகின்றனர்.

மாத பணிவிடையின்போது பெரும்பாலான தாங்கல்களில் அன்னதானம் வழங்கப்படுகின்றது. அன்னதானம் வழங்க இயலாத தாங்கல்கள் நித்தியப்பால் தருமம் வழங்குகின்றன.

4. ஆண்டுப் பணிவிடை (திருவிழா)

தாங்கல்கள் அனைத்தும் அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை ஆண்டு விழாவாகக் கொண்டாடுகின்றன. பெரும்பாலும் தாங்கல்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றன.

திருவிழாவின்போது அன்னதானம், ஊர்வலம் போன்றவை நடைபெறுகின்றன. தாங்கல்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒருநாள் திருவிழாவையோ, இருநாள் திருவிழாவையோ, ஐந்துநாள் திருவிழாவையோ, பத்துநாள் திருவிழாவையோ கொண்டாடுகின்றன.

சில தாங்கல்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். இன்னும் சில தாங்கல்களில் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டுமே ஆண்டுத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

பதிகளைப் போன்றே தாங்கல்களிலும் பிச்சை எடுத்துச் செய்யும் அன்னதானம் நடைபெறுகின்றது. சில தாங்கல்கள் அவதார தினத்துடன் ஏடு வாசிப்பையும் ஆண்டுத் திருவிழாவாக நடத்தி வருகின்றன.

ஆண்டுத் திருவிழாக்கள் பதிகளில் நடைபெறுவது போன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெறுகின்றன. கொடி மரமில்லாத தாங்கல்களில் கொடி ஏற்றம் இல்லாமலேயே திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பல தாங்கல்களில் பத்தாம் திருவிழா அன்றும், சில தாங்கல்களில் பத்துத் தினங்களும் அன்னதானம் நடைபெறுகின்றன.

தாங்கல்களின் வளர்ச்சி

தாங்கல்களின் வளர்ச்சி என்பது என்பது தென்னிந்தியா முழுவதும் அதிகமாகக் காணப்படுகின்றன. அய்யா வைகுண்டர் தன்னுடைய காலத்திலேயே அதிகமான திருநிழல்தாங்கல்களை ஏற்படுத்தி எண்ணினார். இயன்றவரை ஏற்படுத்தவும் செய்தார். தனது சீடர்களைப் பல்வேறு இடங்களுக்கு அனுப்பி பல்வேறு தாங்கல்கள் ஏற்பட்டிடவும் வழிவகை செய்தார்.

அய்யா வைகுண்டரே பல ஊர்களுக்கும் சென்று திருநிழல்தாங்கல்களை ஏற்படுத்தினார். அய்யா வைகுண்டரால் ஏற்படுத்தப்பட்ட தாங்கல்கள் இணைத்தாங்கல்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் தாங்கல்கள் சிறு குடிசைகளில் அமைக்கப்பட்டிருந்தன. இன்று குடிசைகளில் அமைந்த தாங்கல்களைக் காணமுடிவதில்லை. அனைத்துத் தாங்கல்களும் காங்கிரீட் கட்டிடங்களாகவே காட்சியளிக்கின்றன.

1997-ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்தியா முழுவதுமாக 8000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டும் 1500 தாங்கல்களுக்குப் பிடிமண் பாலபிரஜாபதி அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.

அய்யாவழி, அய்யா, வைகுண்டர், அகிலத்திரட்டு, அருள் நூல், ayyavazhi, akilathirattu, arul nool, ayya vaikundar