அகிலத்திரட்டு அம்மானை 11881 - 11910 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 11881 - 11910 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கலைக்க வொருகடுவாய்க் கடுங்கோபங் கொண்டெழுந்து
வலைக்குள் நுழைந்ததுகாண் மாயவனார் தன்செயலால்
உடனேதான் சேவுகர்கள் ஓடிமிக வளைந்து
அடவுடனே வலையை அமர்த்தி மிகப்போட்டு
உபாயத்தாற் சென்று ஒருகூட்டுக் குள்ளடைத்துக்
கபாடத்தால் கட்டிக் கனகூடு தானெடுத்துத்
தாமரை குளத்துச் சன்னாசி பாதமதால்
நாமளு மன்னனுக்கு நாடிப் பிழைத்தோமென்றார்
நல்லவென்னி யுண்டு நற்சாணாச் சுவாமியிடம்
வல்லவர் தானென்று மாதவாய்க் கொண்டாடித்
தேடித் திரியாமல் திக்கெங்கும் வாடாமல்
ஓடித் திரியாமல் உயர்சாணாச் சாமியினால்
நாமும் பிழைத்தோம் நற்கடுவாய்க் கொண்டுவந்தோம்
சீமையாளு மரசன் செப்பும் வாக்குப்படியே
கடுவாயைக் கொண்டு காலமே போவோமென
வெடுவாகக் கூடதுக்குள் வேங்கை தனையமர்த்திச்
சுமந்துகொடு வந்தார் துடியான சேவுகர்கள்
அமர்ந்த கடுவாய் அதறுகின்ற வோசையினால்
நருட்கள் மிகப்பதறி நாற்கரைக்கு மாட்கள்விட்டு
வருகின்ற வேளை மாகோடி யாய்ச்சனங்கள்
சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்று
ஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரெனப்
பார்க்க வருஞ்சனங்கள் பலசாதி யுங்கோடி
போர்க்குத் திரள்போல் போற வகைபோலே
எண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரே
மண்ணளந்த நாதன் மனமகிழ்ந் தேயிருந்து
சாமி யருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள்
நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லி
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
நாட்டுக் கரிவிரிநாள் நாரா யணனும்நான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi