அகிலத்திரட்டு அம்மானை 14281 - 14310 of 16200 அடிகள்
சுந்தரியு மொத்தச் சோர்ந்துமன தேகலங்கி
புலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும்
சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம்
என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்று
பொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள்
தலையி லெழுதுஞ் சங்கரரே தஞ்சமென
உலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்து
இனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகி
மனம்பிரிந்து மாது மதலை யழுதாப்போல்
பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்று
சிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள்
மாது பகவதியாள் வயசுபதி னாறுடையாள்
சீதுகந்தகாளியையும் சிவனையும்மிகநினைத்து
கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள்
எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள்
தாயில்லாப் பிள்ளை தயங்கினாற் போலேநின்று
வாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள்
சோடு பிரிந்த துய்யப்புறா வுமிரங்கிப்
போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்தி
உள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும்
எள்ளுக்குள் ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான்
சங்குள் பிறந்த சமயத்திருமணியும்
எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும்
தனியே யிருந்து தனதுள் ளகமடக்கி
மனிதர் காணாமல் மறைந்துநின்று மாதுநல்லாள்
கிழவன் தனைத்தேடி கிளிமொழி யாள்பார்த்துக்
களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள்
கூட்டிக்கொண்டு வந்த கூனுக் கிழவனையும்
காட்டித்தர மாட்டீரோ கன்னிகுல மாதர்களே
ஆதிமகா லட்சுமியே அண்ட மளந்தவளே
விளக்கவுரை :
அகிலத்திரட்டு அம்மானை 14281 - 14310 of 16200 அடிகள்
அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi