அகிலத்திரட்டு அம்மானை 12991 - 13020 of 16200 அடிகள்

அகிலத்திரட்டு அம்மானை 12991 - 13020 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தினத்தினங்கள் பாடித் திருவேடம் போடலுற்றார்

விருத்தம்

முன்னே குருநா டைவருக்கு மீண்டு கொடுத்து மிகக்கலியால்
பொன்னோர் மானா யுருவெடுத்துப் பொருப்பே யேறி முனிகையினால்
சென்றோங் கூடு மிகப்போட்டு ஸ்ரீரங்க மேகச் செல்வழியில்
மின்னா ரிவர்க ளேழ்வரையும் மேவிப் புணர்ந்தோ மவ்வனத்தில்

விருத்தம்


வனத்தில் புணர்ந்து மாதர்களை மக்க ளேழும் பெறவருளிப்
புனத்தில் காளி தனைவருத்திப் பிள்ளை யேழு மிகஈந்து
இனத்தில் பிரிந்த மானதுபோல் இவர்க ளேழு மடவாரை
வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக் கொடுத்து மீண்டோமே

விருத்தம்

மீண்டோங் கயிலைக் கிருந்துபின்னும் மெல்லி யிவர்கள் தவம்பார்க்க
ஆண்டோர் சிவனா ருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து
சான்றோரிடமே பிறவிசெய் தரணி தனிலே நாம்வருவோம்
என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே

நடை

முற்பிறவி செய்த மொய்குழலார் வந்தாரென
நற்பிறவி கொண்ட நாரா யணர்மகிழ்ந்து
ஆடரம்பை மாரை அருமைமணஞ் சூட்டவென்று
வேடம திட்டார் வீரநா ராயணராய்
நாரா யணராய் நல்லதிரு வேடமிட்டுச்
சீரான காவிச் சீலை மிகப்புரிந்து
ஒருதோளில் பொக்கணமும் உத்திராட்ச மாலைகளும்
துரித முடன்சிரசில் துளசிமா லைபுனைந்து
கையிற் பிரம்பும் கனத்தசுரைக் கூடுடனே
மெய்யில் வெண்பதமும் உத்திராட்ச மாயணிந்து
வேலுமிகப்பிடித்து வேடமிகதரித்து
மாலு நிறமாய் வாய்த்ததொட்டில் மீதிருந்து
ஆகமத்தி லுள்ள அறிவுஞா னம்பேசிப்
பாகமதில் நிற்கும் பாலதியச் சான்றோரைப்
பார்த்து அருகழைத்துப் பச்சைமா லேதுரைப்பார்
நாற்றிசை யுமறிய நல்லகுலச் சான்றோரே
உங்களுட தாய்மார் உற்றகன்னி மார்களைநான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு, அய்யா வழி, Akilathirattu, Ayyavazhi