அய்யா வைகுண்டர் வைகுண்டம் போதல் மற்றும் அவரது
சீடர்கள்
பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக
அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார்.
இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக்
கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில
வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும்
அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால்
சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார்.
அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய
அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது.
வைகுண்டர் 1851- ஆம்
ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில்
வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில்
பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின்
அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர்
மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதி ரூபமாக பள்ளியறையில் பாவித்து
சான்றோர் திருநாள் நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து.
மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு
வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை
முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம்.
அய்யா வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. முந்தின யுகத்தில்
பாண்டவர்களாக இருந்த ஐந்து பேரையும் இக்கலி யுகத்தில் ஐந்து சீடர்களாக பிறவி
செய்யப்பட்டதாக அகிலம் கூறுகிறது. அவர்கள்,
- தர்ம சீடர்
- வீமன் சீடர்
- அர்ச்சுணன் சீடர்
- சகாதேவன் சீடர்
- நகுலன் சீடர்