அய்யாவழி புனித தலங்கள் மற்றும் நூல்கள்



அய்யாவழி புனித தலங்கள் மற்றும் நூல்கள்

அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்பைடயில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது.

இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அருள் நூலின் வரலாறு தெளிவு இல்லை. ஆனால் இது அய்யாவின் சீடர்களாலும், அருளாளர்களாலும் எழுதப்பட்டவைகளாக நம்பப்படுகிறது. இன்னூலில் அய்யாவழி வழிபாட்டு வணக்க முறைகள், சடங்கு முறைகள், அருளாளர்கள் மற்றும் சீடர்களின் தீர்க்க தரிசனங்கள், அய்யாவழி சட்டங்கள் ஆகியன அடங்கும்.

அய்யாவழி மக்களுக்கு ஐந்து முக்கிய புனிதத் தலங்கள் உள்ளன. அவைகள் ஐம்பதிகள், பஞ்சப்பதி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் சுவாமிதோப்பு பதி தலைமைப் பதியாகும். இவையல்லாமல் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியனவும் அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெறுவதாலும் இவை ஏழும் முக்கிய புனிதத் தலங்களாகவே கருதப்படுகின்றன.

ஆனால் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவற்றை சில உட்பிரிவுகள், ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக தற்போதைய அவதாரப்பதி எனப்படுவது, வைகுண்டர் அவதாரம் எடுத்த இடத்தில் இல்லை என்பது அவர்கள் கணிப்பு. ஆனால் அவர்களும் திருச்செந்தூரை இரண்டாம் நிலை புனித நூலாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால் தலைமைப்பதி வெளியிடும் பதிகளின் பட்டியலில் பஞ்சப்பதிகள் தவிர்த்து மற்றைவகள் இடம்பெறவில்லை. அவதாரப்பதி தவிர பதிகள் அனைத்தும் குமரி மாவட்டத்துள்ளேயே இருப்பதால், மொத்த மாவட்டமே அகில இந்திய அளவில் உள்ள அய்யாவழியினரால் புனிதமானதாக கருதப்படுகிறது.

ayya, ayyavazhi, vaikundar, akilathirattu, arul nool, sattuneetolai, swamy thoppu