அய்யா வைகுண்டரின் தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு



அய்யா வைகுண்டரின் தூல மற்றும் சூட்சும உடல்களின் பிறப்பு

கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது.

அகிலம் இதைப்பற்றி கூறும் பொது அக்குழந்தை இறந்து பிறந்ததாகவும், சடம் பிறந்த உடன் சம்பூரணதேவனின் ஆன்மா அவ்வுடலில் செலுத்தப்படுவதாக கூறுகிறது. ஆனால் அங்கு நடந்த எதையும் குழந்தையின் பெற்றோரோ, குடும்பத்தாரோ அறியவில்லை. பிறந்து சில நொடிகள் குழந்தை சலனமற்று இருந்ததை மட்டும் அவர்கள் அறிகிறார்கள். இச்செயல் குறோணியை அழிக்க இறைவன் எடுக்க இருக்கும் வைகுண்ட அவதாரத்துக்காக போடப்பட்ட திட்டத்தின் முதல் பகுதியாகும். ஆக சம்பூரணதேவனாகிய இக்குழந்தை இதுமுதல் முத்துக்குட்டி என்ற பெயரைத் தாங்கி வளர்ந்து வருகிறது.

முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மாள் என்னும் மங்கையை மணக்கிறார்.

திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள். பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார்.

மூன்றாம் நாள் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல், வைகுண்டர் கடலிலிருந்து வெளிப்படுகிறார். அவர் கொண்டுள்ள சொரூபம்(உடல்) காரணமாக முத்துக்குட்டி கடலிலிருந்து வருவதாக வெயிலாளுக்குத் தெரிகிறது. அவள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்கச் செல்கிறாள். ஆனால் அவர் அவளை தடுக்கிறார். மேலும் தாம் அவளது மகன் இல்லை என்றும் கலியை அழிக்க நாராயணரே வைகுண்டராக உலகில் அவதரித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் தாய்ப் பாசம் காரணமாக அவரை வெயிலாள் தனது மகன் முத்துகுட்டி என்றே பார்க்கிறாள். அவளுக்கு தனது நிலையை வைகுண்டர் கீழ்க் கண்டவாறு கூறுகிறார்,

"ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்
கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு
குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ"

ஆனால் அதை ஏற்றுக் கோள்ளும் நிலையில் வெயிலாள் இல்லை. அதனால் தான் பிறந்த கடற் பதியின் மண்டபங்களையும் அதன் மெடைகளையும் அவரின் பிறப்பு மற்றும் வருகைக்கு சான்றாகக் கட்டுகிறார். ஆனால் தாய்ப் பாசம் தடுக்க, அவளால் வைகுண்டரின் நிலையை அறிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வைகுண்டர், தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் கூறக்கூடாது என்று கூறுகிறார்.

இவ்வாறு கூறிய வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பு:- வெயிலாள் இவ்விடத்திலேயே விழுந்து இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பிறகு அகிலத்திரட்டில் வேறெங்கும் வெயிலாள் பற்றிய எந்த செய்திகளும் இல்லாதது இக்கூற்றினை மெய்ப்பிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால், "வெயிலாளின் உயிர் இவ்விடத்திலேயே எடுக்கப்படுகிறதெனில், வைகுண்டர் அவளிடத்தில் 'தான் காட்டிய பதிச் சிறப்பை யாருக்கும் உரையாதே' எனக் கூறியது ஏன்?" என்பது எதிர் தரப்பு வாதம்.

ayya, ayyavazhi, vaikundar, akilathirattu, arul nool, sattuneetolai, swamy thoppu