அய்யாவழி தத்துவப் பின்புலம் மற்றும் புராணம்



அய்யாவழி தத்துவப் பின்புலம் மற்றும் புராணம்

அகிலத்திரட்டு அம்மானை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழிய நடையில் உயர்ந்த தத்துவங்களை கதை ரூபத்தில் வழிப்படுத்தியிருக்கும் நூல் என்னும் கருத்தும் உள்ளது. அகிலத்திரட்டு முழுவதையும் - குறோணி முதல் தர்மயுகம் வரை அனைத்தையும், மனித உடலுக்குள்ளேயே விளக்கி அதை, யோக சித்தி அடையச் செய்யும் நூல் என்பது சில கல்வியாளர்கள் கணிப்பு.

மேலும் அகிலம் சித்தர் பரிபாஷையில் இயற்றப்பட்ட நூலாகும். அகிலத்திரட்டில் காணப்படும் 'ஏரணியும் மாயோன்', உச்சிச் சுழி', 'மூக்குச் சுழி', 'முச்சுழி', 'லலாடம்', 'மேலக்கால் மண்டபம்', 'கொண்டையமுது', 'அகங்காணும் பாந்தள்' போன்ற பயன்பாடுகள் இதற்கு சிறந்த சான்றுகளாகும்.

ஆறு துண்டுகளாக வெட்டப்படும் குறோணி எனப்படுவது, மனித உடலின் ஆறு அகப்பகைகள் எனவும், அவைகளை கடந்து சகஸ்ராரப் பகுதியில் இறைவனை முழுமையாக உணர்வது தான் தர்மயுகம் என்பது அய்யாவழி தத்துவ வாதிகளின் கருத்து. மேலும் அய்யாவழி ஒரு அடிப்படை ஒருமை கோட்பாட்டையும் கொண்டுள்ளது.

இதன் மூலம் நாம் காணும் அனைத்தும் ஒன்று என்றும், இங்கு காணப்படும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு ஒருமை என்னும் முழுமுதற்பொருள் இருப்பதாகவும் அகிலம் கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் திருவாசகம் இவ்வொருமையிலிருந்து பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவானதாகக் கூறுகிறது. மேலும் அகிலம் மனிதப் பிறவிக்கும் ஏனைய பிரபஞ்சத்திற்கும் ஒரே உற்பத்தி விதியை கூறுவதாகத் தெரிகிறது.

அய்யாவழியின் புராண வரலாறு இந்து சமயத்தின் புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. அகிலத்திரட்டின் முதற்பகுதியான முந்திய யுகங்களைப்பற்றி கூறும் பகுதி இந்து புராணங்களுடன் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் பல கடவுளர்களையும், கோட்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பெருவாரியானவைகளை திருத்தியமைத்திருக்கிறது.

அய்யாவழியின் யுகங்களும், அவதாரங்களும் எண்ணிக்கையில் இந்து சமயத்திலிருந்து மாறுபடுகிறது. அய்யாவழியில் கலி உருவகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்து சமயத்தில் இல்லை. இதைப்பற்றி கூறும் பொழுது அகிலத்திரட்டு அம்மானை, இவை சார்ந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் அதனால் அவை (பழைய புராணங்கள்) சாரம் கெட்டுவிட்டதாகவும் கூறுகிறது.

அகிலத்தின் இரண்டாம் பகுதி, கலி யுகத்தில் கலியை அழிக்க இறைவன் அவதரித்த செய்தியை உலகுக்கு கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏகாபரன், வைகுண்டராக அவதரிக்கிறார். வைகுண்ட அவதாரம் மிகவும் பிந்திய காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பதால் அவர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுகிறார். அவர் நிகழ்த்திய பெரும்பாலான அவதார இகனைகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன. இதனிமித்தம் அகிலத்திரட்டின் இரண்டாம் பகுதி வரலாறு மற்றும் புராணச் செய்திகளின் கலப்பாக அமைந்துள்ளது.

ayya, ayyavazhi, vaikundar, akilathirattu, arul nool, sattuneetolai, swamy thoppu