அய்யாவழி வழிபாட்டுத்தலங்கள்



அய்யாவழி வழிபாட்டுத்தலங்கள்

பதிகளும் நிழல் தாங்கல்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன.

இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1997-ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்தியா முழுவதுமாக 7000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. அய்யாவழி ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால், சுவாமிதோப்பு பதி சமய ரீதியாக மட்டுமே தலைமைப்பதியாக விளங்குகிறது. ஆட்சி ரீதியாக அல்ல.

பதிகள் அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள் கோயில்கள் போன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, அய்யா வைகுண்டரின், அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக பதிகளுடன் தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும்.

நிழல் தங்கல்கள் பதிகளை போல் அல்லாமல் சிறிய அளவுடையதாக இருக்கும். இவற்றுள் பல அகிலத்திரட்டு பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவைகளில் அன்னதர்மமும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளிலுமாக, 8000 - க்கும் மேற்பட்ட தாங்கல்கள் செயல் பட்டு வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அய்யாவழியில் பதிகள் மற்றும் தாங்கல்களில் வேறுபாடு அகிலத்தின் அடிப்படையில் பகுக்கப்படுகிறது. ஒரு பகுதியை பதி என்று அழைக்க இரண்டு விதிமுறைகள் உள்ளன. அவை, அது அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெற்றிருக்க வேண்டும். அது அய்யாவின் அவதார இகனையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

அய்யாவழியின் வாழ்வியல் மற்றும் இறையில் சட்டங்கள் அகிலம் முழுவதுமாக பரவலாக காணப்படுகிறது. இது இறைவனால் துறவிகளிடமோ, தேவர்களிடமோ, கீழ்நிலை கடவுளர்களிடமோ அவர்களின் கேள்விகளுக்கேற்றவாறு கூறப்படுவதாக புராணத்தொகுதியின் கூடே பின்னப்பட்டு இடையிடையே நூல் முழுவதும் சிதறுண்டு காணப்படுகிறது.

அருள் நூல் இவ்வகையில் ஒரு தொகுப்பு நூலாக கருதப்படுகிறது. முதன்மை புனித நூலான அகிலம் கூறும் கோட்பாடுகள் இந்நூலில் விரிவாக விளக்கப் பட்டிருக்கின்றன. அருளாளர்களின் தீர்க்கதரிசனங்கள், அழிவு விபரங்கள், சமய-சமூக சட்டங்கள் ஆகியனவற்றை இந்நூல்  உள்ளடக்குகிறது.

ayya, ayyavazhi, vaikundar, akilathirattu, arul nool, sattuneetolai, swamy thoppu