அய்யா வைகுண்டர் பண்டாரமாக காட்சி அளித்தல்
வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய
பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி
படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில்
பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என
விளம்புகிறது.
நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள்.
மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள்
வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க
போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும்
போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான்
அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர் நடக்கும்
கலியுகத்தை அழித்து பேரின்பநிலையான தர்மயுகத்தை மலரச்செய்து சான்றோருக்கு நித்திய
வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக்
கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட
மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப்
பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.
சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற
வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில
முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய
மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு
கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும்
ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது.
மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும்
இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.