அய்யாவழி சமயச்சடங்குகள் மற்றும் புது வழிபாட்டு முறை



அய்யாவழி சமயச்சடங்குகள் மற்றும் புது வழிபாட்டு முறை

புராணம் மற்றும் கோட்பாடுகளைப்போன்று சமயச்சடங்குகளிலும் அய்யாவழி, தனக்கு இனமான புதுப்பாதையிலேயே பயணிக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களையும், புறக்கணிக்கப் படுகிறவர்களையும் இறையியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும், வெகுவாக தேற்றி தைரியமளிப்பதாக உள்ளது.

இதற்கு சான்றுகளாக; புற மற்றும் அகத்தூய்மையை உணர்த்தும் துவையல் தவசு, தீண்டாமையை துரத்தும் முறையான தொட்டு நாமம், சுயமரியாதை மற்றும் உறுதியை அளிக்கும் முறையான தலைப்பாகை அணிதல், சாதி முறைகளைக் களையும் விதமாக அமைக்கப்பட்ட முத்திரிக்கிணறு, ஆகிய சடங்குகள் விளங்குகின்றன.

அய்யாவழியில் சமயச்சடங்குகளுக்கு இறையியல் ரீதியாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதும், அவை சமுதாய ரீதியாக ஜாதிப் பிரிவினைகளை புறந்தள்ளி, அனைத்து மக்களும் ஒன்று என்னும் கோட்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவற்றுள் மிகச்சில இந்து சமயச்சடங்குகளை ஒத்து இருக்கின்றன.

அய்யாவழி உதயமாகி 170 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமயசமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது.

அய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட புதிய சமயமாகவும் கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகைளயும் தன்னுள் ஐக்கியப் படுத்திவிட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர்.

மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவோடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யாவழியோ அவ்வாறல்ல. அது தானாக எழுந்து தன்னைத் தானே நிலைபடுத்திக் கொண்டது.

ayya, ayyavazhi, vaikundar, akilathirattu, arul nool, sattuneetolai, swamy thoppu