அய்யாவழி நம்பிக்கைகள்
அய்யாவழியின் புனித சின்னம், திருநாமம் ஏந்தும்
தாமரை அய்யாவழி மறுபிறவி கொள்கையையும் தர்ம யுகத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால்
இந்து சமயத்தின் வருணாஸ்ரம தர்மம் என்னும் ஜாதி முறையை இவ்யுகத்துக்கு பொருந்தாதது
என நிராகரிக்கிறது.
மூர்த்தி வழிபாட்டையும் அய்யாவழி ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் பாமர மக்களும் வழிபட ஒரு உருவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து
அய்யாவழியில் இறைவன் அமர்வதர்க்கான இருக்கையாக, பள்ளியறையில் ஆசனம் அமைக்கப்பட்டு, அவ்வாசனத்தில்
அய்யா அரூபமாக அமர்ந்திருப்பதாக உணர்த்தப்படுகிறது.
அய்யாவழி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் ஒப்பற்ற ஒரே
கடவுளின் மாறுபட்ட வடிவங்களாக காண்கிறது. இவ்வைகயில் அய்யாவழி அத்வைதம் மற்றும்
சுமார்த்தம் ஆகியவைகளை ஒத்திருக்கிறது. அய்யாவழி துவைதம் மற்றும் விசிஷ்டா துவைதம்
ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திருப்பதாகவும் கருத்துகள் உள்ளன.
மேலும் அய்யாவழி ஏகத்துவத்தை வலியுறுத்துகிறது. அய்யாவழி
தீய சக்தியின் மொத்த ஒருங்கிணைந்த உருவமாக குறோணி என்னும் அசுரனை உருவகிப்பதன்
மூலம் இந்து மதத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்ட
குறோணி, பின்வரும்
ஒவ்வொரு யுகங்களிலும் ராவணன், துரியோதனன் என அசுரப்பிறவிகளாகப் பிறக்கிறான்.
அவர்களை அழிக்க விஷ்ணு, அந்தந்த யுகங்களில்
ராமன், கிருஷ்ணன்
மற்றும் கடைசியாக வைகுண்டராக அவதரிக்கிறார். தற்போதைய கலியுகத்தில் குறோணியின் ஆறாவது
துண்டான கலி மாயையாக உலகத்தில் பிறக்கிறான். அக்கலியனை அழிக்க ஏகப்பரம்பொருளான இறைவன்
வைகுண்ட அவதாரம் கொள்கிறார். ஆக வைகுண்டர் அவதாரம் எடுத்த உடனேயே கலி அழியத்தொடங்கி
தற்போது அழிந்துக் கொண்டிருப்பதாக அகிலம் கூறுகிறது.
அன்ன தர்மம் அய்யாவழியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெருவாரியான நிழல் தாங்கல்களில் மாதத்துக்கு ஒரு முறையாவது அன்ன தர்மம் செய்கிறார்கள்.
அய்யாவழியின் இறையியல் மற்ற ஏகத்துவ சமயங்களிலிருந்து வேறுபடுகிறது. அது ஏகம் என்னும்
அடிப்பைட ஒருமையையும், பல்வேறு
மாற்றங்களுக்கு பின்னால் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் கூறுகிறது. மேலும் பிரபஞ்சத்தை
சிவம் என்றும் இதை இயக்கும் சக்தியை சக்தி என்றும் கூறுகிறது.
மேலும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளைப் பற்றியும் கூறுவதுடன்
மேலும் பல கீழ்நிலை தெய்வ சக்திகளையும் கூறுகிறது. ஆனால் கலியன் கேட்ட கொடிய வரங்கள்
காரணமாக நாராயணரால் குறோணியின் ஆறாவது துண்டான கலியை நேரடியாக அழிக்க இயலாது.
அதனால், அனைத்து தெய்வ சக்திகளும் ஏகத்துள் ஒடுங்கி, அந்த ஏகம் உலகில்
கலியை அழிக்கும் பொருட்டு மூன்றின் தொகுதியாக வைகுண்டம் என அவதரிக்கிறது. மேலும் வைகுண்டர்
மறு மன்னர் எதிரியில்லாமல் ஆளும் எட்டாவது யுகமாக ஒரு தர்ம யுகத்தையும் அகிலம்
கூறுகிறது. அனைத்து தெய்வ சக்திகளும் ஒடுங்கி வைகுண்டமாக அவதரிப்பதால்
கலியுகத்தில் அய்யா வைகுண்டர் ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக அகிலம் கூறுகிறது.
இதன் அடிப்பைடயில் அய்யாவழி ஓரிறைக் கோட்பாட்டு சமயமாகவும் உருவம் பெறுகிறது.