அய்யா வைகுண்டர் ஏகம் மற்ற கடவுளர்கள் ஆளுமை



அய்யா வைகுண்டர் ஏகம் மற்ற கடவுளர்கள் ஆளுமை

அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால் ஒரே கடவுள் பற்பல இயல்புகளில் பல இறை சக்திகளாக வெவ்வேறு உருவங்களில் காட்சிக் கொடுக்கிறார்கள் என்றும் அகிலம் கூறுகிறது. ஆனால் நாம ரூபங்களுக்கு அப்பால் ஒரே சக்தியாக அனைத்தையும் இயக்கி, அனைத்தும் தானான சுயம்புவாக இருப்பது, ஏகம் என்னும் ஒருமை என்கிறது.

அகிலத்தின் முதல் பகுதி மும்மூர்த்தி, தேவர்கள் என பல கடவுளர்களையும் அவர்களின் ஆளுமை ஏற்றத் தாழ்வுகளையும், பின்னர் இரண்டாம் பகுதியில் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கும் ஆளுமையுடன் வைகுண்டர் அவதாரம் எடுக்கின்ற போதும், அனைத்து தேவர்களும் தனித்தனியாக இருந்து இயங்கி வருகிறார்கள் (வைகுண்டரின் ஆளுமைக்கு உட்பட்டு).

அனைத்து தெய்வ சக்திகளும் வைகுண்டரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கின்ற போதும் வைகுண்டரின் அவதார காலகட்டம் முழுவதும் நாராயணர் வைகுண்டரின் உள்ளாகவும், வைகுண்டரின் தந்தையாகவும் இரட்டைத் தன்மையுடன் இயங்குகிறார். அதனால் அகிலம் பல கடவுளர்களின் இருப்பை ஒத்துக்கொள்கிறது. ஆனால் வைகுண்டரை அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகவும், அனைத்து தெய்வ சக்திகளை உள்ளடக்கியவராகவும் காண்கிறது.

ஆனால் கடவுள் மிக உயர்ந்த நிலையில் ஒன்றாகவும், ஒப்பற்றதாகவும், உருவமற்றதாகவும், மாறிலியாகவும், அனைத்தையும் இயக்குவதும் மறுமுனையில் அனைத்தாக இயங்குவதும், காலம் - இடம் என்னும் வரையைறக்கு அப்பாற்பட்டவராகவும் இருக்கிறார் என ஆகிலம் கூறுகிறது.

ஏகம் என்னும் பதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அகிலத்தின் துவக்கம் முதல் இறுதி வரை கூறப்படுகிறது. ஆனால் மிக உயர்ந்த கருத்தியலாக கருதப்படும் இப்பதத்திற்கு வேறு எந்த நேரடி தனி விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்பதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக மட்டும் அகிலம் முழுவதும் கூறப்படுகிறது.

இப்பதம் தமிழில், "ஒன்று, ஒப்பற்றது" என்று விளக்கம் பெறுகிறது. ஆக, ஏகம் என்னும் இப்பயன்பாடு இறைசக்தி தொடர்பாக அய்யாவழியில் காணப்படும் ஒருமைக்கோட்பாட்டு விளக்கமாக கருதப்படுகிறது. இவ்வேகத்தின் கீழ்நிலை தெய்வசக்திகளாக பல கடவுளர்கள் கூறப்படுகின்ற அதேவேளையில், வைகுண்டர் அனைத்துக்கும் அப்பாற்பட்ட ஏகத்தின் அவதாரமாக அகிலம் கூறுகிறது.

ஆனால் மறுமுனையில், வைகுண்டர் கலி மன்னனால் கைதுசெய்யப்படும் இடத்தில் அவர் சான்றோரை தேற்றும் விதமாக அமைந்திருக்கும் அடிகளில் வைகுண்டரே ஏகத்தை படைத்ததாக கூறுகிறார். இக்கோணத்தில் வைகுண்டர் ஏகத்துக்கும் அப்பாற்பட்ட முழுமுதல் சக்தி எனப்படுகிறார்.

அவதார மும்மைய பொறுத்த வரையில் வைகுண்டரின் உள்ளே மூன்றில் ஒன்றாக ஏகம் இருப்பதால் ஏகத்தின் அனைத்து குணங்களும் வைகுண்டருக்கும் பொருந்தும். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அருள் நூலின் பல அடிகள் வைகுண்டரை முழுமுதலாக கூறுவதோடு அவரின் விஸ்வ-ரூபத்தினை வெளிப்படுத்துகிறது.

ayya, ayyavazhi, vaikundar, akilathirattu, arul nool, sattuneetolai, swamy thoppu