அய்யாவழி ஒரு அறிமுகம்



அய்யாவழி ஒரு அறிமுகம்

அய்யாவழி, (அய்யா+வழி --> தந்தையின் வழி, இறைவன் வழி) பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும்.

அய்யாவழி பலவிதங்களில் இந்து சமயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளி விவரம் இல்லை.

அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக சமய ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்ற போதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும்.

அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன.

அய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும், சில சமயச் சடங்குகளும் இந்து சமயதுடன் ஒத்திருக்கின்ற போதிலும், பெரும்பாலும் வேறுபட்ட கருத்துக்களே அதிகமாக வெளிப்படுத்தப் படுகின்றன. குறிப்பாக தீய சக்தி, தர்மக்கோட்பாடு போன்றவற்றில் அய்யாவழி இந்து சமயத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது.

இச்சமயத்திற்கு அய்யாவழி என்ற பெயர் எப்பொழுது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெளிவு இல்லை. பெயர் காரணத்துக்கு பல கோணப்பார்வைகள் இருக்கின்ற போதும் அவைகளை பொருள் கொள்ளுமிடத்து பெரும்பாலும் அவையனைத்தும் ஒத்த கருத்துடையனவாகவே இருக்கின்றன. மிகவும் நுட்பமாக பொருள்கொள்ளும் போது வேறுபடுகின்றன. அவை,

தந்தையின் பாதை - இச்சமயம் தோன்றிய சுவாமிதோப்பு பகுதியின் தமிழ் பேச்சு மொழியில், அய்யா (தந்தை) + வழி (பாதை). எனில், தந்தையை மிகவும் நேசத்தோடு அழைக்கும் 'ஐயா' என்னும் பதத்தை இறைவனை அழைக்க பயன்படுத்தி, 'அன்புத்தந்தையின் பாதை' என்று பொருள் கொள்ளப்படுகிறது.

தலைவனின் ஒப்புயர்வற்ற வாய்மை - அய்யா (தலைவன்) + வழி (ஒப்புயர்வற்ற வாய்மை) என இப்பதங்களின் இலக்கியப் பயன்பாடுகளிலிருந்து பொருள்கொள்ளப்படுகிறது.

குருவின் வழிபாடு - அய்யா (குரு) + வழி (வழிபாடு) என கொள்ளப்படுகிறது.  இறைவனின் பாதத்தை சேரும் வழி - அய்யா என்பது (இறைவன்) + வழி என்பது (சேரும் வழி) எனவும் பக்தி முறையாக பொருள் கொள்ளப்படுகிறது.

மேலும் அய்யா என்னும் பதம் தமிழில், தந்தை, குரு, உயர்ந்தவர், சிறந்தவர், மதிக்கத்தக்கவர், தலைவர், அரசர், போதகர் என்றெல்லாம் பொருள்படுவதாலும், வழி என்னும் பதம் தமிழ் மொழியில், பாதை, விதம், முறை, செயல்வகை, கருத்து, இலக்கு, நோக்கம், என்றெல்லாம் பலவாறாக பொருள்படுவதாலும் இப்பதங்களின் பயன் பாடு இங்கே வரையறைக்குட்பட்டதல்ல.

ayya, ayyavazhi, vaikundar, akilathirattu, arul nool, sattuneetolai, swamy thoppu