அய்யாவழியில் இருபொருள் வாதம் மற்றும் சான்றோர்
நீடிய யுகத்தில் தோன்றிய குறோணி, ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்வரும்
யுகங்களில் அவை ஆறும் அழிக்கப்பட்டு இறுதியில் கலியன் நடுத்தீர்வை செய்யப்பட்டு
நரகத்தில் தள்ளி கதவடைக்கப்படுவதாக அகிலம் கூறுகிறது. இதன் மூலம் அய்யாவழி இருபொருள்
வாதத்தை வலியுறுத்துவது போன்றதொரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் கலி என்பது மாயை
என்று வர்ணிக்கப்படுவதால் மாயையின் அழிவே அவ்வாறு கூறப்படுவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
மேலும் அகிலம் தொடக்கம் முதலேயே அடிப்படை ஒருமையாகிய
ஏகத்தை கூறி வருவதால், இது
இருபொருள் வாதக் கோட்பாட்டை மங்கச்செய்கிறது. அது மட்டுமல்லாமல் அய்யாவின்
சீடர்களாலோ அருளாளர்களாலோ எழுதப் பட்டவைகளாக நம்பப்படும் அருள் நூலின் பெருவாரியான
பகுதிகளும் ஒருமைக்கோட்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதும் இருபொருள் வாதம்
பற்றிய கூற்றுகளை அய்யாவழியிநின்று புறந்தள்ளுகிறது.
அய்யாவழியின் படி சான்றோரின் சகாப்தம் துவாபர
யுகத்தின் நிறைவுடன் துவங்குகிறது. அயோத அமிர்தவனத்தில் சப்த கன்னியருக்கு பிறந்த
ஏழு பிள்ளைகளும் அவர்களது வம்சாவழியினரும் இவ்வாறு சான்றோர் என அழைக்கப்படுகின்றனர்.
அகிலத்திரட்டின் படி இச்சான்றோர் என்னும் பதம் தற்போது
அய்யாவழியில் சமய ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இரு கோணத்தில் பயணிக்கிறது.
இன்று பெரும்பாலும் அய்யாவழியினரின் பார்வை சான்றோர் விடயத்தில் சமய ரீதியாகவே
இருக்கிறது.
இப்பார்வை மூலம், தமிழ் இலக்கியங்களில் இப்பதத்தின் பயன்பாடுகளைக் கொண்டும், அகிலத்தின் சில
அடிகளை மையமாகக் கொண்டும், "எவர்
ஒருவர் நீதியாக வாழ்கிறாரோ", "எவர் ஒருவர் (அனுபவத்தில்) இறைவனை காணும் தகுதி பெறுகிறாரோ"
அவர் சான்றவர் என்னும் பரந்த அடிப்படையினாலான உலகளாவிய பார்வையை முன்வைக்கப்படுகிறது.
மறுபுறம், இப்பார்வையில் அய்யாவழியை பின்பற்றும் எவரும்
சான்றவர் என்னும் கருத்தும் கொள்ளப்படுகிறது. ஆனால் அகிலத்தின் பரவலான பார்வை மேலோட்டமாக
இவ்வாறல்லாமல் பெரும்பாலும், இப்பதத்தின் சமுதாய கோணத்தையே வலியுறுத்துவதாக தெரிகிறது.
இதனிமித்தம் இப்பார்வை சாணார் இனத்தையே மையப்படுத்துகிறது.
சான்றோர் இவ்வுகத்தின் முதல் மக்களினம் என்னும்
கருத்து அகிலத்தில் மேலோங்குவதால், இப்பார்வையில் சாணார் எனப்படுபவர்கள், தற்போது
தமிழகத்தில் வாழும் நாடார் இனம் என்னும் பார்வை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. ஆனால்
ஆதி காலத்தில் வாழ்ந்த,
அரேபியர்களால் அல் ஹிந்த் என்றும் விவிலிய காலகட்டங்களில் பஞ்ச நதிகளின் மக்களினம்
என்றும் அழைக்கப்பட்டவர்களும், 250 மேல் பிரிவுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும்
இன்று சிதறுண்டு கிடக்கும் மக்கள் என்று கொள்ளுதலே பொருத்தமானதாகும்.
அகிலத்தின் ஆதிச்சாதி போன்ற பயன்பாடுகள் இதற்குச்
சான்று. ஆனால் மறுபுறம் அய்யாவின் போதனைகளும், அகிலத்தின் செய்திகளும் சாதி முறைய கடுமையாக
கண்டிப்பதாலும் இக்கோணத்தாலான சமுதாயப் பார்வையை அகிலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே
பரவலாக கருதப்படுகிறது.