அய்யாவழி சின்னம்
அய்யாவழியின் சமயச் சின்னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும்.
இதில் தாமரை, 1008
இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் புனித
நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும் அருள் நூலிலும் திருநாமம் பற்றிய
குறிப்புகள் உள்ளன.
ஆனால் அகிலத்தின் கருத்தோட்டத்தின் கருவை
ஆராயுமிடத்து அய்யாவழியின் சின்னமான நாமம் ஏந்தும் தாமரை சார்புடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றனவேயன்றி
இச்சின்னம் பற்றிய நேரடிக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில
வரலாற்றுக்குறிப்புகள் வாயிலாக இச்சின்னம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து
அய்யாவழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது ஏற்கும் விதமாக உள்ளது.
அய்யாவழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் அய்யாவழியில்
'நாமம்
ஏந்தும் தாமரையாக உருவகிக்கப்பட்டிருக்கும் சஹஸ்ரார தளம் தாமரை சஹஸ்ராரச்
சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது. ஏழு (மேல்) + ஏழு (கீழ்) என
பதினான்கு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது.
மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலைகீழான தாமரை
இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில்
உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டிடக் கலையமைப்பு அண்மைகாலத்தில்
வழக்கத்துக்கு வந்திருக்கிறது.
அகிலத்தின் புராணவோட்டம் கூறும் எட்டு யுகத்தை
தத்துவ ரீதியாக மனித உடம்பின் எட்டு ஆதாரங்கள் எனவும் கூறுவர். முதல் நீடிய யுகம் விந்து
எனவும், கடைசி
மற்றும் பரிபூரண நிலையான சஹஸ்ராரம் என்பது தர்ம யுகம், எனவும் இத்தத்துவம்
விளக்கம் பெறுகிறது. இக்கருத்தோட்டத்தில் குண்டலினி எனப்படும் தன்னுணர்வு (சக்தி)
பரஞானத்தின் துவக்கமான விந்து எனப்படும் நீடிய யுகத்திலிருந்து அது பரிபூரணமடையும்
சஹஸ்ராரமெனப்படும் தர்ம யுகத்தை அடைய வேண்டும்.
அங்கே ஏகம் எனப்படும் பரிபூரண ஒருமையுடன் ஜீவான்மா
சங்கமித்து,
தனக்கு இனமான தனி நாமரூபம் அழிந்து, தன்னிலை கெட்டு, அதுவும் ஏகமாகிறது. ஏகமென்பது வைகுண்டம் (வைகுண்டர்)
ஆதலால் வைகுண்டர் தர்ம யுகத்தை ஆள்கிறார் அல்லது வைகுண்டர் சஹஸ்ராரத்தில்
ஜீவாத்மாக்களால் முழுமையாக உணரப்படுகிறார்.
மேலும் இந்து ஆகமங்களின்படி சஹஸ்ராரச் சக்கரத்தின்
இதழ்களின் எண்ணிக்கை 1000
ஆகும். ஆனால் அய்யாவழி சின்னத்தில் இது 1008-ஆக கருதப்படுகிறது. காரணம் அகிலத்திலோ அருள் நூலிலோ
'1000' என்பது
காணப்படாத அதேபட்சத்தில் '1008' என்றவெண்
திரும்பத்திரும்ப வருவதைக் காண முடியும். இவற்றுள் முக்கியமாக வைகுண்ட அவதார ஆண்டு
கொல்லம் ஆண்டு 1008
ஆகும். அதனால் இப்புனித நூற்களின் குறிப்புகள் அடிப்பைடயில் 1008 இதழ்த்தொகுதி
அய்யாவழி சின்னத்தில் பயன்படுத்தப்படுகிறது.