உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயு தத்தாலும்
இலகுமன்ன ராலும் இந்திரனார் தம்மாலும்
கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும்
வல்லவனே நீயும் வாழுங் கயிலையதும்
தேவர்தே வேந்திரனும் திருக்கன்னி மாமறையும்
ஏவலா யுன்னுடைய லோகமதி லுள்ளவர்கள்
முழுது மெனக்கு ஊழியங்கள் செய்திடவும்
பழுதில்லா திந்தவரம் பரமனேநீர் தாருமென்றான்
தாருமென்று சூரன் தாழ்மை யுடன்கேட்க
ஆரு மொப்பில்லா ஆதி யகமகிழ்ந்து
கேட்டவர முழுதும் கெட்டியா யுங்களுக்குத்
தாட்டிமையா யிப்போ தந்தோ மெனவுரைத்தார்
வரங்கொடுத் தீசர் மலைகயிலைக் கேகாமல்
பரம உமையாளைப் பையஎடுத் தணைத்து
அலைமே லேஆயன் அருகிலே போயிருந்து
மலைமே லேசூரன் வாய்த்ததென் றவ்வரங்கள்
கயிலை முழுதும் காவலிட்டுத் தேவரையும்
அகில முழுதும் அடக்கியர சாண்டனனே
அப்படியே சூரன் அரசாண் டிருக்கையிலே
முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே
தேவரையும் வானவரைத் தெய்வேந் திரன்வரையும்
மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே
ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட
ஈனமில்லா தாயன் எடுத்தா ரொருவேசம்
ஈசனிடஞ் சென்று இயம்பினா ரெம்பெருமாள்
வாசமுள்ள ஈசுரரே மாபாவிச் சூரனுக்கு
ஏது வரங்கள் ஈந்திர்கா ணென்றுரைக்கத்
தாது கரமணிந்த தாமன்பின் னேதுரைப்பார்
வையகத் திலுள்ள வலுவாயு தத்தாலும்
தெய்வலோ கத்தில் சிறந்தமன்னர் தம்மாலும்
விளக்கவுரை :