அகிலத்திரட்டு அம்மானை 211 - 240 of 16200 அடிகள்
நந்தா வனம்பூத்து நகரி மணம்வீச
செந்தா மரைபூத்துச் செலம் புமணம்வீச
அரகரா வென்று அபயமிடு மொலியும்
சிவசிவா வென்று துதிக்கின்ற பேரொலியும்
மடியில் பணம்போட்டு மார்க்குத்தும் பேரொலியும்
முடியு மடியுமில்லா முதலோனைப் போற்றொலியும்
முத்தாலே பாண்டி முதன்மடவா ராடொலியும்
மத்தாலே மோரு மடமடென்ற பேரொலியும்
சமுத்திரத்து முத்து தான்கரையில் சேருவதும்
குமுத்திரளாய்ப் பெண்கள் குரவை யிடுமொலியும்
சங்கீத மேளம் தானோது மாலயமும்
மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும்
காரண வேதக் கல்விமொழி ஆலயமும்
வாரணத்தின் மீதில் வரும்பவனி யாரபமும்
மாவேறி வீதி வரும்பவனி வீதிகளும்
காவேரிபோல கரையுந்துறைமுகமும்
கூரை யிலேமுத்து குலைசாய்க்கும் கன்னல்களும்
பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன் னளிப்பாரும்
அன்னமிடுஞ் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும்
சொர்ண மளித்துச் சொகுசுபெற நிற்பாரும்
சிவனே சிவனேயென்று சிவகருத்தாய் நிற்பாரும்
தவமே பெரிதெனவே தவநிலைகள் செய்வாரும்
கோவிந்தா வென்று குருபூசை செய்வாரும்
நாவிந் தையாக நால்வேதம் பார்ப்பாரும்
மாரி பொழியும் மாதமொரு மூன்றுதரம்
ஏரி பெருகி ஏரடிக்க மள்ளரெல்லாம்
நாத்து நடும்புரசி நளினமிகு சொல்லொலியும்
கூத்து ஒலியும் குருபூசை தன்னொலியும்
எப்பாரெல் லாம்புகழும் ஏகா பதியதுபோல்
தப்பா தெச்சணத்தின் தன்மையீ தம்மானை
விளக்கவுரை :