அகிலத்திரட்டு அம்மானை 11971 - 12000 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஈட்டி யெடுத்து இனிக்குத்த வேணுமென்று
மேட்டி யொருவன் விசையாகக் குத்திடவே
எட்டிக் கடுவாய் ஈட்டி தனைப்பிடித்து
விட்டிடவே யருகில் நின்றதொரு வேதியனைக்
குத்திச்சே யீட்டி குடல்பீற அம்மானை
கத்தியும் பட்டுக் கதறியொரு வன்சாகப்
பார்த்திருந்த நீசப் பாதக னேதுரைப்பான்
நாற்றிசைக்கு மேராதே நல்மறையோன் பட்டதுதான்
ஆயிரம் பசுவை அடித்துமிகக் கொன்றாலும்
தோச மீதல்லவொரு வேதியனைக் கொன்றதுதான்
என்னபோ லாச்சு யாம்நினைத்த காரியங்கள்
மன்னன் கலிராசன் மாசறட னுமயர்ந்து
ஞாயமீ தல்லவென்று நடந்தா னரண்மனைக்கு
தோசமொன் றேற்றோமெனச் சொல்லி மிகப்போனான்
அப்போது சனங்கள் அல்லோரு மேதுரைப்பார்
இப்போதிப் பேயனுக்கு இதுவுமொரு நல்லதுதான்
என்றுசொல்லி நீசன் ஏற்ற சறடனுமே
ஒன்றுமுரை யாடாமல் உள்ளபடை யத்தனையும்
கூட்டிக்கொண்டு போனான் கோட்டையதுள் ளம்மானை
வேட்டைப் பலித்துதில்லை வெற்றிதான் பேயனுக்கு
பார்க்கவந் தசனங்கள் பலதிசைக்கு மிவ்விசளம்
ஆர்க்கு மிகவே அறிவித் தகன்றனரே
அப்போ சுவாமி அருகில் மிகவாழும்
மெய்ப்பான சனங்கள் மெத்தசந் தோசமதாய்
இண்ணத் தறுவாய் ஈசுரன் காத்ததுதான்
அண்ணல் காயாம்பு அச்சுதனார் காத்ததுதான்
என்று மனமகிழ்ந்து எம்பெருமாள் நாரணர்க்கு
அன்று விவரம் அறிவித்தா ரன்போர்கள்
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
ஆட்டுவோ மாட்டுவோங்காண் அல்லாமல் வேறுளதோ

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11941 - 11970 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தந்தாய்ச் சறடன் சௌனி கௌடனுமே
கவுடன் வெகுடன் கீர்த்திதுரை சானிகளும்
மகுடவர்த்தனர் முதலாய் மந்திரி மார்களுமே
துலுப்பர் சலுப்பருடன் சிப்பாயி மார்களுமாய்
அலுப்பர் பட்டாணிகளும் ஆனகரி காலாளும்
காலாளும் வீராளும் கருமறவர் சேகரமும்
சூலாளும் தோலாளும் சூழ்ந்தபடை யாளர்களும்
ஒக்கத் திரண்டு ஒருமித்தாங் காரமுடன்
மிக்கத் திரண்டு வெடியாயு தத்துடனே
ஆனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
சேனைக்கா ரர்கோடி திரண்டுவந்தா ரம்மானை
இந்தப் படையோடும் எச்சாதி தன்னோடும்
வந்து வளைந்தார் மாகடுவாய்க் கூட்டையுமே
அப்போது ராசன் அருகில்தலை யாடகளை
இப்போது இந்த ஏற்றகாடு வாய்தனையும்
குண்டியிலே கம்புகொண்டு குத்துவது கோபம்வரக்
பண்டுநாமடைத்த பைத்தியக்காரனையும்
இக்கூட்டுக்குள்ளே அய்யாயிருந்தனரே
பண்டுபடைத்த பகவாந்தனையறிந்து
கண்டுகடு வாயதுவும் கம்பதுக் கேபதுங்கி
அதறி மிகமுழங்கி அதுகவிழ்ந்து தான்படுத்துப்
பதறி யதுகிடந்து படுக்கை யிளகாமல்
நீச னவன்குத்த நெடுஞ்சற டன்காமல்
வாசப் பொடிவருத்தி வன்னப் பொடிநிறைத்து
உலயில்மெழுகது போல் உள்ளமிகவுருகி
அலையில் துயில்வோனை அதுவணங்கி நின்றதுவே
விட்டான்கடுவாய்மேல் விதறிஇளகுமென்று
மட்டாய்க் கடுவாய் மாறி யிளகாமல்
கிடந்ததுகா காணையா கிருபை யதினாலே
தடந்தெரியா வண்ணம் சனங்கள் மிகப்பார்க்க

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11911 - 11940 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பட்சி பறவை பலசீவ செந்துக்களை
நிச்சயமாய்ப் படைத்த நீலவண்ண நாதனும்நான்
மண்ணே ழளந்த மாயப் பெருமாள்நான்
விண்ணே ழளந்த விஷ்ணு திருவுளம்நான்
ஏகம் படைத்தவன்நான் எங்கும் நிறைந்தவன்நான்
ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன் றானதினால்
நாகக் கடல்துயின்ற நாகமணி நானல்லவோ
சீவசெந்துக் கெல்லாம் சீவனும் நானல்லவோ
பாவம்பிறந்து நீசன் இப்பரந்த உலகத்திலே
இந்நீச னெல்லாம் என்னையறி யாதிருந்தால்
மின்னிலத்தில் நான்படைத்த மிருக மறியாதோ
என்றே யடக்கி ஏகந் தனைநினைத்து
ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே
பதறாதே யென்றனுடப் பாலகரே யென்றுசொல்லி
இதறாத மாயவனார் இருந்தார்கா ணம்மானை
அப்போ தவரிருக்க அம்மிருக மானதையும்
வைப்போடு நெஞ்ச மாநீச ராசனிடம்
கொண்டுவைத்தா ரந்தக் கோபக்கடு வாய்தனையும்
கண்டு கலிராசன் கனகசந் தோசமுடன்
அன்று சிப்பாயிகட்கு ஆனவரி சைகொடுத்து
இன்றுகடு வாய்தனையும் இப்போது கொண்டுசென்று
கூட்டி லடைத்துவைத்துக் கோப மதுவருத்த
ஈட்டிமை யாயதற்கு இரையொன்றும் போடாமல்
இன்றைக்கு வைத்து இதுநாள் கழிந்ததன்பின்
சென்றந்தப் பேயனிடம் செல்லவிட லாமெனவே
அடைத்துவை போவெனவே அரசன் விடை கொடுக்கத்
திடத்தமுடன் சேவுகர்கள் சென்றடைத்தார் கூடதிலே
அன்றுராஜன் அடுத்தநாள் சென்றதற்குபின்
இன்றுகடு வாய்திறந்து இகழ்ச்சியது பார்பபோமென்று
வந்தானே யந்த மாநீசப் பாதகனும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11881 - 11910 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கலைக்க வொருகடுவாய்க் கடுங்கோபங் கொண்டெழுந்து
வலைக்குள் நுழைந்ததுகாண் மாயவனார் தன்செயலால்
உடனேதான் சேவுகர்கள் ஓடிமிக வளைந்து
அடவுடனே வலையை அமர்த்தி மிகப்போட்டு
உபாயத்தாற் சென்று ஒருகூட்டுக் குள்ளடைத்துக்
கபாடத்தால் கட்டிக் கனகூடு தானெடுத்துத்
தாமரை குளத்துச் சன்னாசி பாதமதால்
நாமளு மன்னனுக்கு நாடிப் பிழைத்தோமென்றார்
நல்லவென்னி யுண்டு நற்சாணாச் சுவாமியிடம்
வல்லவர் தானென்று மாதவாய்க் கொண்டாடித்
தேடித் திரியாமல் திக்கெங்கும் வாடாமல்
ஓடித் திரியாமல் உயர்சாணாச் சாமியினால்
நாமும் பிழைத்தோம் நற்கடுவாய்க் கொண்டுவந்தோம்
சீமையாளு மரசன் செப்பும் வாக்குப்படியே
கடுவாயைக் கொண்டு காலமே போவோமென
வெடுவாகக் கூடதுக்குள் வேங்கை தனையமர்த்திச்
சுமந்துகொடு வந்தார் துடியான சேவுகர்கள்
அமர்ந்த கடுவாய் அதறுகின்ற வோசையினால்
நருட்கள் மிகப்பதறி நாற்கரைக்கு மாட்கள்விட்டு
வருகின்ற வேளை மாகோடி யாய்ச்சனங்கள்
சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்று
ஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரெனப்
பார்க்க வருஞ்சனங்கள் பலசாதி யுங்கோடி
போர்க்குத் திரள்போல் போற வகைபோலே
எண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரே
மண்ணளந்த நாதன் மனமகிழ்ந் தேயிருந்து
சாமி யருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள்
நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லி
கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண்டுக் குள்மகிழ்ந்து
நாட்டுக் கரிவிரிநாள் நாரா யணனும்நான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11851 - 11880 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வேகம் பெரிய வேங்கைகடு வாய்பார்த்து
நாகமதிலுங் கடிய நல்லகடு வாய்பார்த்து
நாழிகை ஏழதுக்குள் நம்மிடத்தில் கொண்டுவரத்
தூளி யதுபறக்கும் சூறா வளியதுபோல்
கொண்டு வாவெனக் கூறிச் சறடனுமே
விண்டுரைப்பான் பின்னும் வீரியமாய்ச் சேவுகர்க்கு
நன்று மொழிகேளும் நல்வீரச் சேவுகரே
இன்றேழு மணிக்கு இங்கேகொண்டு வராட்டால்
தூக்கியே வுங்களையும் தூண்டலில் போட்டிடுவேன்
ஆக்கினைகள் செய்துவுங்கள் ஆமிசத்தை வாங்கிடுவோம்
என்று சொல்லிச் சேவுகரை இறுக்கமுட னிறுக்கி
இன்றுபோ மெனவே ஏற்றவரி சைகொடுத்து
அனுப்பினாள் சேவுகரை அந்தவே ளைதனிலே
பனிப்பிசினும் வெயிலைக் கண்டு பதறினாற்போல்
பதறியே சேவகர்கள் பண்பாகச் சட்டையிட்டுக்
குதறியே வந்து கூண்டுரைப்பார் மாயவேனாடு
நாரா யணரே நாங்கள்போ குங்கருமம்
பேராய் நடக்கவேணும் பெரிய திருமாலே
உம்மைச்சோ தனைபார்க்க குங்கருமம் ஆனதினால்
செம்மையுள்ள ராசன் சிணமே யனுப்பினர்காண்
ஆனதினால் கடுவாய் அடியேங்கள் கையதிலே
போனவுடன் சிக்கிடவும் புண்ணியரே வந்தாரும்
என்றுரைக்கச் சேவுகர்கள் எம்பெருமா ளுள்ளமதில்
நன்று நன்றென்று நாரா யணர்சிரித்து
விடைகொடுத் தார்கடுவாய் வேகமதில் சிக்கிடவும்
படைச் சேவுக்கத்தார் பாரமலை தானேறி
கடுவாய் கிடக்கும் கனமலைகள் தான்தேடி
முடுகித் தலையாரி முடிச்சு வலைவளைந்து
காடு கலைத்துக் கடுநாய்கள் விட்டேவி
வேடுவர்க ளெல்லாம் விரைந்து கலைத்தனரே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11821 - 11850 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்ன உபகாரம் இவர்க்குநாம் செய்வோமென்று
கன்னல் கதலிக் கனிகள் கொடுப்போமோ
தர்ம மால்தீர்த்தச் சஞ்சலங்க ளானதையும்
அம்மம்மா சொல்ல ஆராலு முடியுமோடி
குட்டம் பதினெட்டும் குடித்தபத மொன்றாலே
கட்டம் முதலாய்க் காணாப் பறந்ததுவே
இப்புதுமை செய்தவர்க்கு இப்போ தொருபுதுமை
கொப்பளிக்கு முன்னே கூடா தோஇவரால்

கடுவாய் சோதனை

ஏதோ வொருதொழிலாய் இவர்பம்ம லாயிருக்கார்
சூதால் கொடுமைவந்து சுற்றுங்காண் நீசனுக்கு
என்று சிலபெண்கள் ஏழைபங் கோனருளை
கண்டு தொழுது கருத்தகலா நின்றுடுவார்
அப்படியே நருட்கள் ஆதிநா ராயணரை
செப்படிபோ லவர்க்குச் செய்தநன்றி சொல்லியவர்
கூரைக்குப் போகக் கூறநினை வில்லாமல்
நாரணரைச் சூழ்ந்து நமஸ்காரஞ் செய்துநிற்பார்
சூழ்ந்து நருட்கள் தொழுதுமிக நிற்கையிலே
தாழ்ந்துசா குங்கலியன் சறடன் தனைநோக்கிப்
பேயனொரு சாணானைப் பிடித்துக்கொடு வந்தோமே
தூய இரும்பு விலங்கதிலே போட்டுவைத்தோம்
சாமியென்று பாவித்தச் சாணான்தனை நாமும்
காமியத் தால்பெருத்தக் கடுவாய் தனைவருத்தி
ஏவிவிட்டுப் பார்த்து இருவகையுந் தானறிந்து
போவெனவே சொல்லிப் பேயன் தனையனுப்ப
வேணுமே யிப்போ விவரமென்ன என்றுரைத்தான்
ஆணுவ மூர்க்க அரச னிதுவுரைக்க
நல்லதுதா னென்று நாட்டமுற் றுச்சறடன்
வல்லபெலச் சேவுகரை வாவென் றருகழைத்து
இப்போ தொருநொடியில் ஏழுமலை யுந்தேடி
வெற்போடு வெற்பெல்லாம் வேக முடன்தேடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11791 - 11820 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாட்டுக் கலியனுக்காய் நற்சோத னையெனவே
நீட்டின காலில் நீசனிட்ட விலங்கோடே
ஏழைகளுக் காக இருந்தார்பா ராவதிலே
கோழைக் குடும்பக் குறும்பர் தமைவதைக்க
மனுப்பா ராவதிலே மாயாண்டி தானிருந்தார்
தனுப்பா ரமடக்கித் தாழ்மையுட னேயிருக்க
ஆகாத நீசன் அழியும் நினைவதினால்
போகாத படிக்குப் பேயன் தனைவிலங்கில்
போட்டு வையென்றும் புள்ளி பதனமென்றும்
கோட்டுக்கா ரர்தமக்குக் கொடுத்தானே வுத்தரவு
அந்தக் கலிராசன் அவனுரைத்த வுத்தரம்போல்
சந்தமுனி மாயனையும் தான்விலங்கி லிட்டுவைத்தான்
அப்போது மாயன் அதிகசான் றோர்களுக்காய்
இப்போ பொறுதிகொண்டு இருக்கே னெனஇருந்தார்
நாட்டுச் சோதனைக்காய் நாராயணர் விலங்கில்
நீட்டின காலோடே நிலம்பார்த் தேயிருந்தார்
சாணான் பால்வைத்துச் சந்தோசப் பாலேற்று
நாணாம லெம்பெருமாள் நற்சோலையி லிருந்தார்
சோலையில் வாழ்பறவை சாமிவந்தா ரென்றுசொல்லி
ஏலேல முங்கூறி எந்நேர முந்தொழுது
நன்றான மாமுனியும் நற்பறவை யானதுவும்
கொண்டாடிக் கொண்டாடிக் கொஞ்சிவிளை யாடிருக்கும்
இந்தவனச் சோலையிலே எம்பெருமாள் தானிருக்க
சந்த முடனருட்கள் சதாகோடி யாகவந்து
தொழுது நமஸ்கரித்துத் தூயோன் பதம்பூண்டு
முழுது முன்பாதமென மொய்குழ லார்சிலர்கள்
நாற்பது வயசாய் நான்சேயில் லாதிருந்தேன்
காப்பதுன் பாதமெனக் கண்டு தொழுதபின்பு
தந்தாரே யெங்களுக்குச் சந்ததி தழைத்தோங்க
வந்தாரே நாயடியார் வாழு மனையிடத்தில்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11761 - 11790 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வெறிப்பேய னென்று விரட்டி மிகஎறியார்
எல்லாம் பொறுதியுடன் எம்பெருமா ளுமடக்கிக்
கல்லாரை யெல்லாம் கமக்கியறுப் பேனென்று
மனதி லடக்கி மாய நெடுமாலும்
கனகத் திருமேனி கண்கவிழ்ந் தேநடந்தார்
நடந்தாரே கோட்டாறு நல்ல பிடாகைவிட்டுக்
கடந்தாரே சுங்கான் கடையெல்கைத் தானும்விட்டுப்
பத்மனா புரத்தெல்கைப் பார்த்துத் தெருவோடே
உற்பனமாய் மாயன் உள்தெருவோ டேநடக்க
ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண் டேபழித்து
வாகாகப் பேசி வைதாரே நீசரெல்லாம்
அதிலு மன்போர்கள் அவரைக்கண் டேபணிந்து
இதுநாள் வரையும் இவர்நடந்த சட்டமதில்
பொல்லாங்கு செய்தாரெனப் பேருநாம் கேட்டதில்லை
எல்லாங் கடைதலைக்கு இட்டதர்ம மேகாக்கும்
என்றன்போர் சொல்லி இவரழுது நின்றராம்
அன்றந்த நாதன் அதுகடந்துப் போயினரே
போனாரே தக்கலையின் புரைக்குள்ளே யுமிருந்து
மானான பொன்மேனி வாலரா மங்கடந்து
வாரிக் கரையும் வாய்த்த நதிக்கரையும்
சீரிய நாதன் சென்றகண் டேநடந்தார்
நடந்துத் திருவனந்தம் நல்லபுரத் தெல்கைகண்டு
அடர்ந்த மரச்சோலை அடவி வனங்கள் கண்டு
கண்டுகொண் டெம்பெருமாள் கண்கொள்ளாக் காட்சியுடன்
பண்டுநாம் சீரங்கத்தைப் பார்த்தகன் றேநடந்து
இவ்வூரைக் கண்டு எத்தனைநா ளாச்சுதென்று
செவ்வுமகா விட்டிணுவும் சிந்தைக்குள் ளேயடக்கி
சிங்காரத் தோப்பில் சுவாமி சிறை
அவ்வூரைப் பாராமல் அந்த வனமானதுக்குள்
எவ்வுயிர்க்குந் தானாய் ஈயுகின்ற பெம்மானும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11731 - 11760 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தருந்தார ருக்காகத் தடியிரும்பி லுமிருந்தார்
சான்றோருக்காகத் தடியிரும்பிலுமிருந்து
மாண்டோ ரையுமெழுப்பும் மாய வலுவாண்டி
அய்யோ அவரை அடைத்துவைத் தேயிருந்த
பொய்யோ புரைக்குள் பொறுக்குமோ கண்ணுகண்டால்
மோளுக் குழியும் மொய்த்தத்தெள் ளினங்களுமாய்த்
தோளு வழியே சொரியுதே தெள்ளினங்கள்

அய்யாவை அனந்தபுரம் கொண்டு செல்லல்

அட்டை மிதக்க அரியத்தேள் ஈமிதிக்க
விட்ட நரகு மிகுவாய்ப் புழுமிதக்க
நாற்றத் துறைகள் நரகத் துறைபோலே
பார்த்த இடமெல்லாம் பலபுழுக்க ளுஞ்சரிய
ஐயோ அய்யாவை அடைத்தப் புரையதிலே
கையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்கு
சான்றோ ருக்காகத் தர்மக் குருநாதன்
மீன்று முழியாமல் முகமலர்ந் தங்கிருந்தார்
ஏழை களுக்காக ஈரொன்றொரு நாளாய்
மீளாச் சிலுவையிலே முள்ளா லடிகள்பட்டு
மரித்துப் பிறந்ததுபோல் மாயக் குருநாதன்
இதுவுகத்துக் கிப்புரையில் இருந்து அழுந்தவென்று
இருந்தாரே மாயவனார் ஏழைகளுக் காயிரங்கிக்
கருந்தார மார்பன் கருத்தில் மிக அடக்கி
எல்லா மடக்கி இவரிருக்கும் நாளையிலே
பொல்லாக் கலியன் புறப்பட்டான் மேற்கெனவே
இப்பே யனையும் இங்கேகொடு வாருமென்று
அப்போது சொல்லி அவனடந்தான் மேற்கெனவே
உடனே சிவாயி உற்றநா ராயணரைத்
திடமாகக் கூட்டிச் சிணமே நடக்கலுற்றான்
கொண்டு போனாரே கோட்டாற்று ஊரோடே
கண்டுபெரும் பாவியெல்லாம் கட்டிகொண்டு தானெறிய
எறிவார் சிலபேர் ஏசுவா ரேசிலபேர்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 11701 - 11730 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமே
தொண்டுசெய்யுஞ் சான்றோர் துயரமது மாறாது
நாம்நினைத்தக் காரியமும் நடந்திடா தானதினால்
ஏனிதைத்தான் சொல்லப் போறோ மெனஅடக்கி
எல்லாம் படைத்த ஏகன் கிருபையென
அல்லா நினைத்தபடி ஆகு மெனவுரைத்தார்
அப்போது நீசன் அவன்வெகுளி யாயுரைப்பான்
இப்போ தொருமருட்டாய் இவன்சமைந்தான் சுவாமியென்று
மருளிதுதா னென்று மாநீசன் தான்மருண்டு
கொண்டுபோங் கோசறடன் கூண்டவன் முன்பதிலே
என்றுரைத்த போது ஏவல்சீவா யிகளும்
நடத்தி யிழுத்து நாரா யணரையுமோ
கடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார்
உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்று
தடதடென எழுந்து சாராய மானதிலே
அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி
நஞ்சில்லை யென்று நல்லபா லென்றீந்தான்
பாலென்ற போது பச்சைநா தன்மகிழ்ந்து
காலனைக்கா லாலுதைத்தக் கடவுளார் தாமகிழ்ந்து
வேண்டி யகமேற்றார் வேதநா ராயணரும்
ஆண்டி யதனால் அஞ்சா திருப்பதையும்
பார்த்துச் சறடன் பண்நா யகமகிழ்ந்து
வேற்றொரு சூட்சம் வேறேயுண் டாகுமென
என்னமோ என்று இவனுணர்ந்துப் பாராமல்
பொன்னர் மயக்கம் பெரிய மயக்கமதால்
கொடுபோங் கோவென்று கூறினான் சேவகநாடு
வெடுவாகக் கொண்டு வெறுநீசன் டாணாவில்
அடைத்துவைத் தானங்கே அன்னீத மாபாவி
திடத்தமுடன் நாரணரும் சிந்தைமிக மகிழ்ந்து
இருந்தா ரேயங்கே ஏழைக்கிரங்கி யவர்

விளக்கவுரை :   
Powered by Blogger.