அகிலத்திரட்டு அம்மானை 12451 - 12480 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஆண்டாறு சென்று அதிகத் தவமதுதான்
கூண்டாய் முடித்துக் குருநாதக் கண்மணியும்
இனிநாம் செய்யும் இயல்பென்ன என்றுசொல்லி
மனிதவ தாரன் மனதில் நினைத்திருக்க
நன்றான முட்டப் பதிதலத்தில் நாரணரும்
மன்றாடும் நல்ல வாய்த்தபர மேசுரரும்
வேதப் பிரமன் விளங்கு மறையோனும்
நாத ரிஷிமாரும் நல்லசங்கத் தோர்களுமாய்ச்
சத்தி யுமையும் சரசு பதிமாதும்
வித்தை முகத்து வேழ முகத்தோனும்
எல்லோரும் வந்து இருந்தார் கடலருகே
அல்லோரும் வந்து அங்கே யிருந்துகொண்டு
ஏற்ற முனியில் இரண்டுபே ரைவருத்திச்
சித்த முடனே திடீரெனவே நீங்கள்சென்று
நம்முடைய பாலன் நல்லவை குண்டரையும்
எம்முடைய அருகில் இப்போ கொடுவரவே
சொல்லி யயைச்சார் சுவாமிதா னென்றுசொல்லி
நல்லியல்பாய்ச் சொல்லி நாரணனை யிங்கழையும்
வாருங்கோ முனியே வாய்த்த தவத்தோரே
சேருங்க ளங்கே திடீரெனவே யிப்போது
என்று விடைகள் இருவருக் குங்கொடுக்க
அன்று முனிகள் அவ்வாயு போல்விரைவாய்க்
கடிதாய் நடந்து கரியமால் நற்றவசு
முடிவாகச் செய்த முகுந்தன் பதியில்வந்தார்

விருத்தம்

வந்தனர் வைந்தர் பாத மலரிணை முனிமார் கண்டு
செந்தமிழ் ஆயன் பெற்றச் சேயிது கண்ணோ விண்ணோ
கந்தரக் கலியை வென்றுக் கனதர்மப் புவியை யாள
முந்தநல் தவங்கள் செய்து முடித்தவா பேற்றிப் பேற்றி

விருத்தம்


பொல்லாக் கலியில் வந்திருந்து பெண்ணோ டவனிப் பொன்னாசை
மண்ணோ டுண்ணு மதத்தாசை மாய்கை விழியார் மருட்டாசை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12421 - 12450 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சென்ற இடமெல்லாம் சிறப்பதிக முங்களுக்கு
என்றைக்கும் நல்ல இயல்பே யருள்வோமென
நல்ல விடைகொடுத்து நாரா யணரனுப்ப
வல்ல வளர்சான்றோர் வாழ்த்தி யவர்போனார்
அவரவர்கள் வீட்டில் அன்பாகப் போனவுடன்
இவரிவர்க்கு நல்ல இயல்புசெய்ய வேணுமென்று
ஏகபர நாதன் எம்பெருமா ளானவரும்
லோகமதி லெம்பெருமாள் ஒருசொரூபங் கொள்ளலுற்றார்
இரப்ப வடிவாய் எடுத்தா ரொருவேசம்
பரப்ப வடிவைப் பாருள்ளோர் கண்டுகண்டு
கோட்டைக் கணக்காய்க் குளிர்ந்தநெல் லேயெடுத்துச்
சாட்டமுடன் காய்கனிகள் சகல வகையுடனே
பழங்கள் முதலாய்ப் பப்படமும் பாயசமும்
வளங்க இலையிட்டு வற்றல்வகை சீனியுடன்
அன்ன முதல்தானம் ஆடையொடு பொன்தானம்
சொர்ணத் தானமுதலாய்த் துவையல்கா ரர்ககெனவே
சான்றோ ரினத்தில் சார்ந்தன்பு கொண்டோர்கள்
ஆண்டோ னருளால் அன்னவஸ்த்திரங் கொடுத்தார்
நித்தம்நித்த மன்னம் நீங்களுண்ணு மென்றுசொல்லிச்
சித்த மிரக்கமதால் துவையற்கா ரர்க்கெனவே
இடைவிடா தபடியே ஈந்தாரே அன்னமது
வடவெல்லாந் தீர்ந்து மகிழ்ந்திருந்தார் துவைத்திருந்தோர்
நாலு திசையதிலும் நடந்துபிச்சை தான்குடித்துப்
பாலு பவிசுடனே பாவித்தி ருந்தனராம்
இப்படியே சான்றோர் இனமா யிருந்தவர்கள்
அப்படியே பிச்சையிட்டு அன்பாய் மகிழ்ந்திருந்தார்
பாங்கா னதுவையல் பண்டா ரங்களெல்லாம்
பூங்கார மாகப் பிச்சையமு துண்டிருந்தார்

அய்யாவை முட்டப்பதிக்கு அழைத்தல்


இந்தப் படியே இவர் வாழும் நாளையிலே
சொந்தத் திருமால்க்கு சுவாமி யுரைத்தபடி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12391 - 12420 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

ஏவினார் சான்றோர் ஏந்திழைக்கும் பிள்ளைகட்கும்
மேவியே சான்றோர் மிகமெலிந்து தான்வாடிப்
பற்றி யிருந்தப் படுசிரங்கு மாறலையே
முற்றுங் கண்ணொளிவு முழுதுந் திறக்கலையே
கும்பிக் குளிரக் குடிக்கக் கிடைக்கலையே
வெம்பு மிலைகனிகள் மிகப்பறிக்கக் காணலையே
ஐயோநா மெல்லாம் அலைந்து மலைந்திருக்க
வையமதி லில்லாத வைசூரி வளைந்துதல்லோ
என்று சனங்கள் எண்ணம் பெரிதாகிச்
சென்ற சனத்தில் சிலபேர் மடிந்திடவே
பதறி நடுங்கி பரனேநீ தஞ்சமென்று
குதறி யுலகில் கூச்ச மிகவடைந்து
எங்கே யிருந்தாலும் ஈசன் செயலெனவே
சங்கை வழுகாமல் தாமோ தரனுடைய
நினைவு மயராமல் நிலைதவறிப் போகாமல்
தன்னுடைய வீட்டில் தான்போவோம் நாமளென்று
போகு முன்னாகப் பெரியோன் பதமணுகிப்
பாகுரைத்து நாமள் பட்டசள முரைத்து
உத்தரவு வேண்டி உற்றிடத்தில் போவோமெனப்
புத்தி யுடனே பெரியோ னடிசேர்ந்தார்
சேர்ந்துவா கைப்பதியின் செய்தியெல்லா முரைத்துப்
பேர்ந்துவந்து முட்டப் பதியின் பெருமைசொல்லி
ஊணுகிடை யாததுவும் உயிரழிவு வந்ததுவும்
கோணுத லெல்லாங் கூறி விடைகேட்டார்
அப்போது நாதன் எல்லோரை யும்பார்த்து
இப்போது உங்கள் இல்லிடத்தி லேபோனால்
நாரா யணக்குருவை நாளு மறவாமல்
பேராக வேயிருந்தால் பேறுங்களுக் கேகிடைக்கும்
அன்ன மளக்கும் ஆதித் திருநெடுமால்
முன்னவன் தன்பேரால் முத்திரிக ளிட்டதினால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12361 - 12390 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

எச்சாதியும் புகழ்ந்து இருந்தார்கா ணம்மானை
அச்சாதி யெல்லாம் அப்படியே சொல்லிமிகச்
சாதிமற்றோ ரெல்லாம் தலைகவிழ்ந் திருக்கையிலே
நாதித் திருமால் நாடுகின்ற சான்றோரை
இவர்க்கருளு மாண்டு இலக்குத் திகைந்துதல்லோ
அவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்று
தோணித்தா ரவர்மனதில் சொர்ப்பனம்போ லெம்பெருமாள்
மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்து
இனிநாம ளிப்போ இருந்த தலமும்விட்டுத்
தனியானோம் நாமளங்கே சார்ந்தோமெ யானாக்கால்
நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோ
எம்முடைய தவமும் இல்லையென்று போயிடுங்காண்
முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல்
தன்னிருந்த சொத்தும் தலத்தை யிழந்தவந்தோம்
இனியங்கே போனால் இருக்க இடமுமில்லை
இனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலே
விழுந்தோமே யானால் மேலும் பதவியுண்டு
அழுந்த லுடன்நினைத்து எல்லோரு மேயிருந்தார்
அப்போ அரிநாதன் ஆகட்டென வுறுக்கி
இப்போநீர் போவும் என்றே விடைகொடுத்தும்
இன்னமிவர் போகலையே என்றே மனதிலுற்று
அன்ன மதைக்குறைத்து ஆழாக் கரிசியிட்டார்
ஆழாக் கரிசி அலர்மலர்ந்த கோவையுடன்
தாழாமல் சனங்கள் சடையாம லேற்றனரே
துவையல் முடங்கவில்லை தொழுதுநிதஞ் சேவிப்பதுவும்
உகப்பாட் டோதுவதும் ஓயாமல் செய்தனரே
இன்னம்போ னாரில்லையே இப்படியே செய்திடினும்
இன்ன மொருவிசனம் இப்போது செய்யவென்று
எண்ணியதற்கென்ன என்றுதிருமனதில்
உன்னித் திருமால் உற்றவை சூரியைத்தான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12331 - 12360 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அந்திசந்தி உச்சி ஆதிதனைத் துதித்துத்
தந்திரம தாகத் தவசு மிகப்புரிந்தார்
கண்டிருந்த மற்ற கலிநீசச் சாதியெல்லாம்
பண்டி லமைத்ததுவோ பனையேறுஞ் சாணார்க்கு
மூணுநே ரந்துவைத்து உச்சியொரு நேரமதாய்
வேணும் பகுத்தாய் வெகுவா யலங்கரிக்க
வேத னவர்க்கு விதித்த விதிப்படியோ
நாதனவர் பங்கில் நாடிமிக வந்ததுவோ
எப்போமீ னுண்டு என்றே மிகப்பார்த்து
அப்போ ததைவேண்டி அரக்குரக் காயவித்து
வாயிலெடுத் திட்டு வயிறுவளர்க்குஞ் சாணார்கள்
புகையிலையு மறந்து பெண்ணாணு மோர்மனதாய்
இந்தப் படியாய் இருக்க இவர்களுக்கு
முந்தை விதித்த விதிவந் தொத்ததுவோ
அவர்க ளுடுக்கும் ஆடையழுக் கில்லாமல்
இவருடுக்கச் சற்றும் எண்ணமொன் றில்லாதார்
மூணுநே ரந்துவைக்கும் உற்றதுணி பொன்னிறம்போல்
தோணுதலா யவர்கள் தேகம் பழபழென
இந்த விதமாய் இவர்கள்பா வித்திடவே
சொந்தத் திருமால் சேர்ந்தா ரவரிடமே
ஆதி மகாமால் அவர்பங்கி லில்லாட்டால்
ஓதி யுணவருந்த ஒன்றுந்தெரி யாதிவர்க்கு
பேற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலை
மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண்
இந்தசா ணார்சீலை எரிசூரி யன்போலே
பந்த வொளிபோலே பழபழெனத் தோணுதுகாண்
பிராமணர் சூத்திரர்கள் பேணி யிவர்தமக்கு
நிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ் சுமக்கிறார்கள்
பாக்கியங்கள் வந்துதென்று பனையேறுஞ் சாணார்க்கு
நோக்கமது வந்துதென்று நீணலத் துள்ளோர்கள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12301 - 12330 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இப்பதியில் நீங்கள் இந்தநே ரம்போனால்
அப்பதியி லுங்களுக்கு அதிகப்பலன் கிட்டுமென்று
தூக்கமதில் சொர்ப்பனம்போல் சொன்னாரே வுத்தரவு
ஆக்க முடனே அவனெழுந்து சொல்லிடவே
கேட்டு எல்லோரும் கெட்டிதா னென்றுசொல்லி
ஆட்டு மெனவே எல்லோருஞ் சம்மதித்த
நடக்கத் துணிந்தார் நாரண ருண்டெனவே
அடக்க முடனிதிலே ஆறுமா சம்வரைக்கும்
இருந்தோமே நன்றாய் இனிநடப்போ மப்பதியில்
வருந்தாமற் போவோம் மகாபரனா ருண்டெனவே
போவோ மெனவே பெண்ணா ணுடனெழுந்து
தாவமுள்ள முட்டப் பதிதலத்தில் வந்தனரே

விருத்தம்

வந்தனர் பதியின் கூறும் வாரியின் செயலுங் கண்டு
சந்தன வாரி போலும் தலமிது நன்ற தாகும்
இந்தநற் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால்
செந்தமி ழாயன் பாதம் செயல்பெற வாழ்வோ மென்றார்

விருத்தம்

வாழ்வ திற்குறை வராது மக்களுங் கிளைக ளோடு
தாழ்வ தில்லை வண்ணம் தவமது வளர்வ தாகும்
நாள்வழிப் பலனுண் டாகும் நாரண ரருளி னாலே
ஆள்வது திடனா மென்று அதிலவ ரிருந்தா ரன்றே

நடை

என்றே மிகமகிழ்ந்து எல்லோரு மோர்முகமாய்
அன்றே மிகமகிழ்ந்து அதிலிருந்தா ரம்மானை
சூழ அணியாய்ச் சுற்று மதில்போலே
நீள அரங்குவைத்து நெருங்கப் புரைகள்வைத்து
வைத்தோர் திசையில் வாசலொன் றாகவிட்டு
மெய்த்தே தினமும் மிகவே துணிதுவைத்து
அன்ன மதற்கு அவித்தநெல் லேயுடைத்து
வன்னமுள்ள காய்கனிகள் வகைவகையாய்த் தான்வகுத்து
நல்லநீர் தன்னில் நாடி மிகத்துவைத்து
எல்லா வகைக்கும் இசைந்தநீ ரேயிருந்தி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12271 - 12300 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீலைரண்டு தன்னைச் செகற்கொண்டு போயினதே
அய்யோ கடல்தான் அங்குசெல்லக் கூடுதில்லை
செய்ய விலகவென்றால் தெள்ளுநம்மை விட்டுதில்லை
வீட்டுக்குள் செல்ல விட்டுதில்லை மூட்டையது
ஊட்டுகின்ற அன்னமதில் உயரவந்து நண்டிருக்கும்
தேகமதிற் சிரங்கு சொறிச்சல் பொறுக்குதில்லை
வேகமுடன் காந்தல் மேலில் பொறுக்குதில்லை
தாகத்துக் கேற்ற தண்ணீர் கிடைக்குதில்லை
பாகமுட னுண்ணப் பற்றுதில்லை தீனதுவும்
இனியெங்கே போவோம் எல்லோரு மென்றுசொல்லி
மனுப்புகழுஞ் சான்றோர் மாதமொரு ஆறாய்
இருந்தா ரதிலே ஈசன் செயலெனவே
திருந்தார மார்பன் திரும்ப வொருதலத்தில்
கொண்டுபோய்ப் பார்ப்போம் குலதெய்வச் சான்றோரை
பண்டு வொருசணான் படுத்திருக்கு மவ்வேளை
சொர்ப்பனம்போல் உற்பனமாய் சுவாமி மிகவுரைத்தார்

முட்டப்பதி தவசு

இதின்நேர் தெற்கு இருக்கு மொருபதிதான்
அதின்நோக்குஞ் சொல்ல ஆராலு மேலாது
துட்டர் தமைவென்று சுற்றுமதில் கோட்டையிட்டு
முட்டப்பதிநாடுமுகுந்தர் முன்னால் ஆண்டதலம்
அலங்கார நற்பதியின் அழகுசொல்லக் கூடாது
அலங்கார மான வாய்த்த கடலதினுள்
தேரு பொன்பதிகள் சிங்கார மேடைகளும்
நீருக்குள் ளேயிருக்கும் நிறங்கள்சொல்லக் கூடாது
கன்னிமா ராடும் கரியநல்லப் பூஞ்சுனைகள்
பொன்னினா லேபடிகள் பூஞ்சப்பிரக் கொலுவும்
மாணிக்கக் கல்லால் வளர்ந்தமணி மண்டபமும்
ஆணிப்பொன் தன்னால் அழகுபூம் பந்தல்களும்
வகையின்ன தென்று வகுக்க முடியாது
தொகையின் தென்று தொகுக்க முடியாது

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12241 - 12270 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வாணுவமாய் ரொம்ப வந்து வளைந்துமிக
காணுதற்கு மெத்த கடுங்கோபமாய் எழுந்து
நடையிற் கடிக்கும் கிடக்கவிடா தேயரிக்கும்
குடிக்கின்ற வெள்ளமதில் கும்பல்கும்ப லாய்க்கிடக்கும்
முடிக்குந் தலையில் முச்சிறங்கை போல்கிடக்கும்
அன்னத்தி லேமிதக்கும் அண்டைக்கல்லி லேவாழும்
முன்னெற்றி மயிரில் மிதந்துமிக முன்னுதிரும்
இடைக்குள் ளிருந்து இடைவிடா தேயரிக்கும்
உடையி லிருந்து ஓயாம லேயரிக்கும்
மேலெல்லா மிதந்து மிகச்சரியும் கீழ்வழியாய்க்
காலெல்லாந் தெள்ளு கனமாய் மிகஅரிக்கும்
மாறி யிவரெடுக்க மனதுசற்று மில்லாமல்
ஆறிப் பதறி அசையாமல் தாமிருப்பார்
வாரிக் கரையில் வளர்நண்டு சேகரமாய்
மாரித் துளிபோல் வந்து வளைந்துமிகப்
பாண்டத்துக் குள்ளே பதிந்திருந் தேவாழும்
காண்டமாய்க் கண்டு கைநீட்ட லாகாதெனத்
தடவி யெடுத்துத் தன்னாலே போநீயென
வடவிப் போகாமல் வளர்ப்பார்கள் போலிருப்பார்
இப்படியே தெள்ளு ஈமூட்டை நண்டினங்கள்
அப்படியே கூடி அவரலைச்சல் செய்திடவே
அல்லாமல் சான்றோர் அவரவர்க்குத் தேகமதில்
பொல்லாத வங்குப் பெரிய சிரங்குடனே
வெகுவாய்ப் பெருத்து மேலிலிடை காணாமல்
தகுவாய்ச் சடைத்துச் சனங்கள்மிக எல்லோரும்
எங்கே யினிப்போவோம் எல்லோரு மென்றுசொல்லி
சங்கை யுடன்கூடிச் சமுத்திரக் கரையருகில்
போயிருக்கும் வேளை பொங்குகடல் கோபமதாய்
வாயிதமாய்த் திரைதான் வந்துகோபித் தடித்து
பாலதியப் பெண்கள் பண்பா யுடுத்திருந்த

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12211 - 12240 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உகத்துக்குத் தக்க உபாயமினிச் செய்யவென்று
மகத்துவ நாதன் மனதில்மிக வுத்தரித்துத்
தெள்ளு தனக்குச் சிணமே விடைகொடுத்தார்
விள்ளுறவே செய்து விடுநீ சிணமெனவே
ஆதி விடையருள அதுவெல்லா மேசமைந்து
மோதி யொருமித்து உற்றஅந்தத் தெள்ளினங்கள்
வந்து வளைந்துதல்லோ வாய்த்ததவத் தோரருகில்
பொந்து பொந்துள்ளும் போடுந் துணியதுள்ளும்
வைத்தக் குடிலுள்ளும் வளைந்ததுகாண் தெள்ளினங்கள்
மெய்த்தபுகழ்ச் சான்றோர் மெலிவாய் மிகச்சடைத்து
மாடா டுகோழி வளர்ப்பில்லா நம்மிடத்தில்
ஏடா விடமல்லோ இதுசெய்யு மாய்மாலம்
இருக்கு மிடத்தில் எண்ணக்கூ டாதபடிப்
பொருக்குப் பொருக்கெனவே பொன்றக் கடிக்குதென்ன
மூணுநேரந் துவைக்கும் உற்றகலை யானதிலே
கோணியலில் பற்றும் குறுந்தெள்ளு வந்ததென்ன
படுக்க இருக்கப் பண்புசற்று மில்லாமல்
முடுக்கமாய்த் தெள்ளு முடுக்கிமுடுக்கிக் கடிக்க
இதல்லால் சான்றோர்க்கு இன்னம்விட்டுப் பார்ப்போமென
சதமில்லா மூட்டை தன்னினங்க ளைவருத்தித்
தவத்தைக் குலைத்துச் சான்றோரைத் தான்விரட்டிப்
பவத்துமாய் நீங்கள் பாவிப்பீ ரென்றுசொல்லி
மூட்டைக் குரைகள் மொழிந்தார் முகுந்தனுமே
சேட்டைசெய் வோமெனவே திரண்டு மிகச்சூழ்ந்து
வந்து வளைந்தார் வாழரியச் சான்றோரை
முந்து பரிந்த மூண்டதெள் ளினங்ளோடு
கூடிக் குலாவிக் கூட்டமிட் டேதிரளாய்த்
தேடிச் சான்றோரைச் செகலதுக்குள் ளேவிரட்ட
வேணு மெனவே விசும்புகொண் டவ்வினங்கள்
பூணு முடைமை போர்த்துந்துணி யிலிருந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 12181 - 12210 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உச்சி யொருநேரம் உணவு மிகஅருந்தி
மெச்சிப் புகழ்ந்த விடிய வொருசாமம்
உகப்பாட்டு மோதி உற்ற அபயமிட்டு
வகையாய் விடிய வரும்நா ழிகையேழில்
துணிகள் துவைத்துத் தோய மதிலிறங்கிக்
கெணியாய்க் குளித்துக் கிருஷ்ணர் பதம்போற்றி
இப்படியே நித்தம் இவர்மறவா வண்ணமேதான்
அப்படியே வாரி அலைவாய்க் கரையிருக்க
வாரிப் புறமாய் வளர்காற்று வாடைமிக
நீரிறைத்தாற் போலே நித்தமந் தத்தவத்தோர்
பேரி லிறைத்துப் பெருவாடை யாய்வீசச்
சீருகந்த நாதன் செயலா மெனஇருந்தார்
இருந்தார் தவசு ஏற்றரிய சான்றோர்கள்
அருந்தாமல் மற்றொன்றும் அன்னமொரு நேரமுமாய்
வாரிநீ ரல்லால் மறுநீ ரறியாமல்
சீரியல்பாய்ச் சான்றோர் செய்தார் தவமதுவே
தவமாய்யிவர்கள் தானிருக்கும் அப்பொழுது
பவமா னதுநீக்கும் பச்சைநா ராயணரும்
முன்னாறு வருசம் உவந்திருந்த நற்றவத்தைப்
பின்னொரு வருசம் பேணி நடத்துமுன்னே
நீச னிடையில் நிறடுசெய் தானதினால்
தோச மவன்பேரில் சுமக்கச்சா பம்புரிந்து
ஆறு வருசம் அதிற்குறைவு வராமல்
வாறு தவசு வகுத்து முடிக்கவென்று
புரிந்தார் தவசு இலக்குத் திகைவதுமுன்
இருந்தார்தவசு லெக்குத்திகைவதுமுன்
சான்றோர் தவத்தைத் தான்பார்க்க வேணுமென்று
ஆன்றோர் மனதில் அன்புமிகக் கொண்டாடி
அலைவாய்க் கரையில் அமர்ந்திருந்த சான்றோரை
நிலைபார்க்க வேணுமென்று நிச்சயித் தெம்பெருமாள்

விளக்கவுரை :   
Powered by Blogger.