அகிலத்திரட்டு அம்மானை 14641 - 14670 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நாதனுட தஞ்சமென நாடி யகமகிழ்ந்து
மாது குமரி வாயுரை யாதிருந்தாள்

பகவதி திருக்கல்யாணம்

அப்போ திருமால் ஆனந்த மேபெருகி
இப்போ பகவதியை ஏற்றமணஞ் செய்யவென்று
உன்னித் திருமால் ஒருசொரூபங் கொண்டனராம்
மின்னுமந்த ஈசுரராய் வேடமது பூண்டு
எக்காள வாத்தியங்கள் இசைதாள நாகசுரம்
அக்காலத் தேவர் ஆகாய மீதில்நின்று
பந்தல் விதானமிட்டுப் பாவாணர் போற்றிநிற்கச்
சந்தமுடன் மனிதச் சாதி மிகமகிழ
தெய்வரம்பை மாதர் திருக்குரவைத் தான்பாட
ஞாய மனுவோர் நற்குரவைத் தான்பாட
பகவதிக்கு நல்ல பாரமணக் கோலமிட்டுச்
சுகபரனு மாலைமணச் சொரூப மெடுத்தவரும்
பிச்சிமா லைபுரிந்து பொற்கடுக்கன் மீதணிந்து
மிச்சமுடன் வெள்ளி விரலாளியோ டரைஞாண்
பொன்தா வடங்களிட்டுப் பொன்னரிய தாலிதன்னை
மின்தா வடம்பூண்ட மெல்லி பகவதிக்குக்
கண்ணானத் தாலி காரணத்து நற்தாலி
விண்ணோர்கள் மெய்க்க விறலோன் மிகத்தரித்தார்
கண்டு தெய்வாரும் கன்னி பகவதிக்கு
இன்று மணம்புரிந்தார் இறையவர்தா னென்றுசொல்லிக்
கொண்டாடிக் கயிலை குவித்துமிக வாழ்ந்திருந்தார்
தொண்டான சான்றோர் துதித்து மிகப்போற்றிக்
கலிமுடிந்த காலம் கன்னி பகவதிக்குச்
சலிவில்லா மாமணங்கள் தானாச்சு நன்றெனவே
எல்லோருங் கொண்டாடி இருந்தார்கா ணம்மானை
செல்வோர் மனதாய்த் தெளிந்தே சிறப்படைந்து
நல்லநா ராயணரும் நாடி யகமகிழ்ந்து
செல்லமட வாரோடு சேர்ந்துவிளை யாடிருந்தார்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14611 - 14640 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

இத்தனைநா ளுமிருந்து இந்தக்கெதி யோஎனக்கு
முத்திபெற்ற ஈசன் முன்னெழுதி வைத்ததுவோ
அய்யோநான் பிறந்த அன்றுமுத லின்றுவரை
வெய்யோன் முகம் வரையும் செல்லியறியேனே
பாவிக் கிழவன் பரிகாசஞ் செய்வானென்று
ஆவி யறிந்திலனே அங்கமது வாடுதையோ
மூன்றுபொழு தாச்சே ஊறும்நீர் தானருந்தி
மீண்டென் சரீரம் விழலா யெரியுதையோ
பாலு பழமும் பருந்தேனுஞ் சர்க்கரையும்
நாலு ரண்டான நல்ல ருசியதுவும்
பாவித்த கும்பி பருங்கனல்போல் மீறுதையோ
ஆவிதடு மாறுதையோ ஆதிபர மேசுரரே
என்று பகவதியாள் எண்ணமுற்றுத் தானழவே
மன்று தனையளந்த மாலுமிக அமர்த்தித்
தேனினிய கண்ணே தேவி பகவதியே
நானினித்தான் சொல்லும் நல்ல மொழிகேளாய்
நான்மணங்கள் செய்யும் நாரியர்கள் தம்மிலுமோ
மேன்மைய தாயுனக்கு வெகுபணிகள் நான்தருவேன்
பொன்பணங்க ளானப் பெட்டக முந்தருவேன்
என்பதி யுந்தருவேன் ஏறும்பல் லாக்கருள்வேன்
தண்டாய மேறிச் சனங்கள்மிகப் போற்றிவரக்
கொண்டாடும் நல்ல குருபாக்கி யந்தருவேன்
திருநாள் பவிசு தினமுனக்கு நானருள்வேன்
அருள்ஞானப் பெண்ணே அங்கிருந்த சீரதிலும்
அய்யிரட்டி யாக அணிவே னுனக்குடைமை
பொய்யென் றிராதே பொன்முடியின் தன்னாணை
என்று மாயாதி இப்படியே ஆணையிட்டுக்
குன்று தனமின்னாள் குமரி மனமகிழச்
சத்தியஞ் செய்து தலையைத் தொட் டாணையிட்டுப்
புத்திவந்து பெண்ணாள் பொன்னும் பகவதியாள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14581 - 14610 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கண்ணேயுனைக் காணாமல் கலங்கிமெத்த நானலைந்து
வாடி யிருந்தேனடி மங்கையுனைக் காணாமல்
கோடி யிருந்தேனடி குமரியுனைக் காணாமல்
தாபத்தா லுன்னைத் தவமிருந்து கண்டேனடி
கோபத்தால் கன்னி குமரியென்னைப் பேசாதே
என்று மகாமாலும் இரக்கமுடன் மாதைமிகக்
கொண்டு அணைவாய்க் குழைவாய் மிகவுரைக்க
அம்மை பகவதியாள் ஆகங் களிகூர்ந்து
நம்மைப் படைத்தது நாயன்முன்னா ளென்றுசொல்லி
இருந்த பதியை எண்ணிöண்ணி மாதுநல்லாள்
பொருந்தும் விழியாள் பெருமிமிக நீருவிட்டு
அழுதாளே சொல்லி அருவரைகள் தானிளக
ஒழுகாக நிற்கும் உலக நருளழவே
மாமரங்க ளெல்லாம் பூத்துச் சொரிந்தழவே
பூமரங்களெல்லாம் பூத்து சொரிந்தழவே
அய்யோ நானிருந்த அம்பலமும் வீதிகளும்
மாயவழித்தெருவும் மண்டபமுந் தோற்றேனே
சிங்கா சனமும் செகல்த்துறையும் வாவிகளும்
மங்காத பொன்னு மாளிகையுந் தோற்றேனே
இலாடக் கிழவன் இராத்திரியில் வந்துநம்மைக்
கபாடமிகச் செய்ததினால் கனபதிகள் தோற்றேனே
பொன்னா பரணமும் பெட்டகமுந் தோற்றேனே
முன்னா ளெழுத்தோ முத்துமண்ட பமிழந்தேன்
ஆண்டிலொரு தேரோட்டம் அதுவெல்லாந் தோற்றேனே
வேண்டும் மனுவந்து விழுந்திறைகள் தோற்றேனே
தண்டையணி சிலம்பும் தரளமெல்லாந் தோற்றேனே
துணைக்கிள்ளை யானத் தோழியரைத் தோற்றேனே
பணப் பெட்டகமும் பைம்பொன்னரிய பட்டுகளும்
தவமணியால் செய்த நல்லவடந் தோற்றேனே
பவமிளவா அறையும் பண்டிருந்த பொன்பணமும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14551 - 14580 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

துன்னுபுக ழீசுரரே தெய்வமட வார்களெல்லாம்
கலியுகத் திலவர்கள் கட்டா யொருதலத்தில்
சலிவில்லா தேவாழ்ந்து சந்ததிகள் வாழ்வுடனே
வாழ்ந்திருப்பா ரென்று வகுப்புரைத்த ரீசுரரே
கூந்தல்மடவாரை கோலமணஞ் செய்கிறதார்
யானறியச் சொல்லும் அரனே எனத்தொழுதான்
தானறியச் சொன்னத் தன்மை மிகக்கேளு
நாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்துக்
கேடுகலி நீசருட கிளைவழிக ளுமறுத்துத்
தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்து
மெய்வரம்பாய்த் தர்ம மேன்மைமுடி யுந்தரித்துத்
தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும்
பொறுமைக்குல மானதிலே பிறக்கிறா ரானதினால்
நாங்க ளெல்லோரும் நமனுவர்க் குள்ளாவோம்
தாங்கி யொருபொருள்போல் தாமிருப்போ மப்பொழுது
முப்பொருளும் ஒருபொருளாய் உருவெடுப்பதானதினால்
அப்பொளுக்குள்ளே ஆதிசிவமடக்கி
ஒருபொருளாய் வந்து உருவெடுப்ப தானதினால்
திருமடந்தை யாவரையும் செய்யுமன்னர் தாமவராம்
என்றீசர் சொல்ல இசைந்தமுனி நல்லதென்று
நன்று நன்றையா நல்லகா ரியமெனவே
சந்தோசங் கொண்டு தானிருந்தான் பெண்ணரசே
முந்தோர் மொழிந்த முறைநூற் படியாலே
வந்ததுகா ணிந்தவிதி மங்கையரே யுங்களுக்கு
எந்ததுகா ரியம்பெண்ணே என்னையொன்றுஞ் சொல்லாதே
தலையில் விதிபிள்ளாய்த் தங்கடங்க விட்டுவிடு
கிலேச மதையெல்லாம் கிளிமொழியே விட்டுவிடு
கொண்டுவந்தேன் பெண்ணே குவிந்தவதி எந்தலைக்குள்
பண்டு அமைத்தபடி பதறாதே பாவையரே
பெண்ணே நீயொருத்திப் பேர்பெரியக் கண்ணரசே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14521 - 14550 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக் கேளார்கள்
தெய்வ நிலைகள் தேசமதில் காணாது
மைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாது
இராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாது
பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார்
தெய்வ மடவார் தேசமதி லேவருவார்
வைய மறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார்
பார்பதியாள் ஈசொரியாள் பரமே சொரியாளும்
சீர்பதியாள ளான சீதாதே விமுதலாய்க்
கன்னி குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம்
உன்னி யவர்கள் ஒருதலத்தி லேகூடி
வாழ்ந்திருப்பார் மங்களமாய் மக்கள்கிளை வாழ்வுடனே
தாழ்ந்திறந்து மாகலியன் தன்னால் மடிந்திடுவான்
தானமதுமாறி தானிறப்பார் கோடியுண்டு
வானஇடியால் வம்பர்சிலர் மடிவார்
பெண்ணாலே ஆணழிவு ஆணாலே பெண்ணழிவு
கண்ணான மதலை கைமதலை தானழியும்
நட்சத்திரத்தால் நாலிலொரு பேரழிவார்
இச்சை மிகுதியுள்ள இயலான மானிடவர்
நஞ்சுதின்று அழியும் நாண்டுகொண்டு தானழியும்
வஞ்சினத்தாலே வலுவிலங்கிலி ருந்தழியும்
மூட்டைக்கடித்தால் மோசம்வரும் சிலருக்கு
நாட்டில் பலகேடு நாளுக்கு நாளுண்டாகும்
துட்டமிருகமதால் நட்டமிகக்காணும்
துட்டவியாதிக்கூடி நட்டப்படுத்துஞ்சிலரை
பொய்யொடு பசாசு புகிந்துநகர் அழியும்
வைகுண்டர் முடியாழும் வையகத்து சான்றோரை
இப்படியே யிந்தக் கலிமாயும் லக்கெனவே
அப்படியே மாமுனிக்கு அருளச் சிவனாரும்
பின்னு முனியும் பிஞ்ஞகனோ டேகேட்பான்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14491 - 14520 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

திலிய னவனுகத்தில் தேவியவள் பெண்ணுடனே
வருகுமந்த வேளையிலே  மாமுன சீராமரிஷி
திருஉமையாள் பங்கரோடு சென்றுநின் றேதுரைப்பார்
நல்லபர மேசுரரே நாட்டிலிந் தக்கலியன்
வெல்லக்கூ டாதவரம் வேண்டியிவன் போறதினால்
எக்கால மையா இவன்முடி வாவதுதான்
அக்கால மெல்லாம் அருளுமென்றா னீசுரரை
நல்லபர மேசுரரும் நாடிமுனி கேட்டதற்குச்
சொல்லலுற்றார் பெண்ணே செவிகொடுத்துக் கேட்டிடுநீ
மாமுனி கேளென்று மாயாத ஈசுரரும்
தாமுனிந்து சொன்னத் தன்மை மிகக்கேளு
பொல்லாக் கலியன் பொன்றியடி வேரறுவ(து)
எல்லா மறிய இலக்கறியக் கூறினராம்
இவன்மா ளும்போது இனத்துக் கினம்பகையாம்
சிவஞான நினைவு செல்லாது தேசமதில்
கொலைகளவு ரெம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்
தலைஞான வேதம் தடுமாறிக் கைவிடுவார்
நேருக்குக் காலம் நெகிழ்ந்திருக்கும் பார்மீதில்
போருக்கு யாரும் புத்தியாய்த் தானிருப்பார்
பிள்ளைக்குத் தாயும் பெருத்தபகை யாயிருக்கும்
கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம்
கூடி யுடன்பிறந்த கோதையரைப் பெண்ணெனவே
நாடி யவரெண்ணி நாணியிறப் பார்கோடி
வாரி கோபிக்கும் வாங்கும் சிலஇடங்கள்
மாரி மறைந்துவிடும் வாயுவது நோய்வீசும்
கீழ்ச்சாதி யெல்லாம் கெறுவிதங்கள் மிஞ்சியவர்
மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான்வருவார்
வம்பருக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும்
அன்பருக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும்
மனுவதிலே கற்பிகழா மாதர்கற் பேயழந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14461 - 14490 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

நன்று நன்றென்று நாரணர்பின் னேதுரைப்பார்
பெண்ணே யெனதுடைய பேரழகிப் பொன்மயிலே
கண்ணே யெனது கனியேயென் தெள்ளமுதே
அமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகி
குமுதவாய்ப் கண்ணே குமரிப் பகவதியே
தேனே மயிலே திகட்டாத தெள்ளமுதே
மானே குயிலே மரகதப்பெண் ணோவியமே
கிஞ்சுகவாய்ப் பெண்ணே கிளிமொழியென் மாமயிலே
செஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே
பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லை
கலியழிய வயது காலஞ்சரி யானதினால்
வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான்
பிறப்பதினா லிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து
சிறப்பதுகள் செய்து செய்கரும முமுடித்து
நாடாள நமக்கு நல்லபல னானதினால்
தாடாண்மை யான சத்தி பகவதியே
உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு
தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான்
கயிலையங் கிரியில் கறைக்கண்ட ரீசுரரும்
மயிலனையா ளான மாது சரஸ்வதியும்
மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள்
சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள்
மண்டைக்காட் டாள்தெய்வ மடந்தையே யுபேர்கள்
குன்றிலுறை வள்ளி கோதைதெய் வானைவரை
பூமடந்தை நல்ல பொன்னரியத் தேவியர்கள்
பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல்
எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில்
வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளு
கலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14431 - 14460 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அணையுண்டோ ஆண்மையுண்டோ அதுசாதிக்குணமே என்றார்

விருத்தம்


சாதிக்குச் சாதி நீயும் சமைந்துநல் வேடம் பூண்டு
தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு
வாதிக்குப் பிறப்பாய்ப் பின்னும் வழியுன்றன் குலமே கந்தன்
சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவே ளானும்

விருத்தம்

அறிவே ளானென்ற பெண்ணே ஆதியு மெனதுள் கண்டாய்
தறமொழி சொல்ல வேண்டாம் தாணுமா லயனும் நானே
உறுமொழி யொருசொற் குள்ளே உகமதை யாள நானும்
மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே

நடை

அப்போ தரிவையரும் ஆதி முகம்நோக்கி
இப்போ துன்மருட்டு எல்லா மிகஅறிவேன்
சோலிமிகப் பண்ணாதே சுகமாயெங்களைவிடுநீ
கேலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரைப்
பாதகங்க ளேராதே பாவையரை விட்டுவிடு
தோதகமாய் வித்தைத் தோகையரோ டேறாது
எங்கள் மயக்கம் எல்லா மிகத்தெளித்து
சங்கையெங்கள் பதிக்குத்தானேகவைத்துவிடு
கேட்டந்த நாரணரும் கிளிமொழியோ டேதுரைப்பார்
நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண்
உங்களைநான் கட்டி ஓடிமிகப் போகாமல்
எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல்
போகவே ணுமென்றால் பிடித்திழுப்பா ருண்டோசொல்
ஏகவே ணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமே
மாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப்
வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும்
வாயுரைத்தாற் போலே மனதுமிகச் சொல்லாதே
நீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவே றாயிருக்கும்
மாய மறிவாரோ மாயாதி யுன்சூட்சம்
உபாய மறிய ஒருவரா லேலாது
என்று மாகுமரி இப்படியே சொன்னவுடன்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14401 - 14430 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ
மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ
தேவாதிதேவன் தேவருக்குமூத்தவனோ
இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம்
சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ
ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ
பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே
போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு
ஏகவழி சற்றும் எனக்குத் தெரியல்லையே
என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு
மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்ப மாயழுதாள்

விருத்தம்

புலம்பிடத் திருமால் மாதைப் பொறுபிள்ளாய்ப் பிள்ளாய்ப் பெண்ணே
சலம்பிநீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு
பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய
நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே

விருத்தம்

நானென்ற ஈச னானால் நானிலம் பிறவார் கள்ளக்
கோனென்ற இடையன் சாமிக் கோபால னான தாலே
தானென்று உலகில் தோன்றி சடாட்சர ஆட்டு மாடி
நானென்று வேடம் பூணும் நாரணன் நீதா னென்றாள்

விருத்தம்

நாரணன்நீ நீதா னென்று நவின்றது சரிதான் பெண்ணே
காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி
நாரண ஈச னல்லால் நடப்புவே றாரு சொல்லு
வாரணமயில்போல் வன்ன மயிலென வுரைத்தா ரையா

தெய்வ சக்திகளை அய்யா ஐக்கியப்படுத்தல்

விருத்தம்

உரைத்திட மொழியைக் கேட்டு உறுமியே கோப முற்று
வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச் சொல்வாள்
நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈச னென்று
துரைத்தன மாகச் சொல்லச் சுணையுண்டோ வுனக்கு என்றாள்

விருத்தம்

சுனையுண்டோ என்றுசொன்னச் சுந்தரபெண்ணேகேளு
கணையுண்டோ அம்புவுண்டோ கலியுகந்தன்னை அழிக்க
இணையுண்டோ நம்மைப்போல யாருமேயில்லை இல்லை

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14371 - 14400 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமது
மனுவி னுடலதையும் மாகுலுக்கமாய்க் குலுக்கி
தனுவளைத்தாற் போலே சடலந் தனைவளைத்து
ஆளுக் கிடையதிலே ஆட்டிச் சடலமதைத்
தூளு மிகப்பறந்து தூசிவா னமடையச்
சடலந் தனையாட்டித் தான்கோப மாய்க்குலுக்கித்
தடதடெனச் சுவாமியுட தாளடி யில்வீழ்ந்து
பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்துஎங்கள்
ஆவி மறுக அவனிதனி லெங்களையும்
சீரழிக்க வென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய்
போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலே
பொல்லாத நீசனுட பிதிரையெல் லாமழித்துச்
சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும்
வைத்தாள நீயும் வந்தாக்கா லெங்களுட
மெய்த்தான மழிக்க மேன்மையோ வுன்றனக்குப்
பாவிநீ யென்னிடத்தில் பருங்கிழவ னாகவந்து
தேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயே
இவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால்
பொவ்வாயில் தீயெரியப் போடுவே னக்கினியை
என்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய்
உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப் பார்க்கிறாயே
என்னமாய மாக இங்கேகொண்டு வந்தாய்நீ
பொன்னம்பலத் தீசன் பொடிப்படுவா னிங்கில்லையோ
பொல்லா தகத்தீசன் பொருப்பேறி மாண்டானோ
எல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்துஇப்போ
மாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோ
வேண்டு மென்றகாலம் வேம்புமினிப் பானதுபோல்
பார்வதி மாதுமையும் பரமே சொரியாளும்
சீர்பதியென் னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும்
ஒக்கொன்றாய்ச் சேர்ந்தாரோ ஓவியம்நான் வேண்டாமென்று

விளக்கவுரை :   
Powered by Blogger.