அகிலத்திரட்டு அம்மானை 10171 - 10200 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

தொட்டுப் பதங்குவித்துச் சொல்லுவான்

நடை

கலைமுனி வேதவியாசர் பிறப்புரைத்தல்


அய்யாவே வேத ஆதிநா ராயணரே
மெய்யா யுருவாய் விளங்குவோ னேகேளும்
பரராச மாமுனிவன் பாலனென முனிவன்
விரைவாக வேபிறந்து வெள்ளிமலை நாதனிடம்
தாதா வுடனே தான்வரக்கண் டீசுரரும்
வாராய் முனியே மதலையுனக் கிங்கேது
அப்போ முனியும் அரனடியைத் தான்பூண்டு
இப்போ திவ்வாண்டு இம்மாத மிந்நாளில்
பஞ்சகரு ணாதி பன்னிரண் டொன்பதுவும்
வஞ்சக மில்லாமல் வந்தா ரொருவீட்டில்
பூரண நாளும் பிரிந்துறையும் நேரமதும்
நாரணம் பிறந்த நல்ல நட்சேத்திரமும்
யோக பலன்கள் ஒத்திருக்கும் நேரமதும்
ஆகமக் கூட்டம் அடங்கிருக்கும் நேரமதும்
மதிசுழி போலாகி வந்துரத மேறுகையில்
துதிமுக வன்சர சோதி பிறந்ததன்றும்
இவ்வாறு கூட்டம் எல்லா மெழுந்தொருநாள்
அவ்வாறு தான்கண்ட அந்நா ழிகைதனிலே
துற்கந்த முலாவும் தோகையொரு பெண்ணிடமே
நற்கந் தமுலாவி நான்சேர்ந்தே னப்பொழுது
சேர்ந்த பொழுது திரண்டுநா தம்வளர்ந்து
காந்தற் றழுப்பாய்க் கன்னி யுடலாகிப்
பெற்றா ளிவனைப் பேரு வியாகரெனக்
கர்த்தா அறியக் கண்டே னிவன்தனையும்
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமுதல்
வாசு நெறிதேசு வழியறிந்த மன்னவன்காண்
ஏகச் சுழிமுனையும் இகமுகி வாம்வரையும்
ஆக முடம்பறிவும் அண்டபிண் டத்தறிவும்
முன்பின் னாராய்ந்து மூதுண ராகமங்கள்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10141 - 10170 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

சீராய் மணவைப் பதிநோக்கித் தான்நடந்தார்
தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே
கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார்
நடந்தெம் பெருமாள் நல்ல கடல்வழியே
திடந்தெளிந்த தேவர்களும் செயசெ யெனநடக்க
கண்டார் துவரம் பதியின்கண் ணோட்டமெல்லாம்
பண்டைப் பதியின் பவிசொல்லா மேபார்த்து
ஆன பதியின் அகலநீ ளம்பார்த்து
மான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும்
நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ் செய்வதற்குத்
தேடும் வடவாசல் சீவிவளர் மலையின்
நேரும்வா சல்தனக்கு நிகரில்லை யாமெனவே
தவசுக் குகந்த தலங்களிது நன்றெனவே
உபசீ வனம்வளரும் உகந்தபுவி யீதெனவே
என்று மனதிலெண்ணி என்றன்பெரு மானும்
அன்றுவே தமுனியை அழைத்துமொழி கேட்கவென்று
வாநீ முனியே வல்லகலைக் கியானமொழி
தானீ கரமாய்ச் சத்தியாய்க் கற்றவனே
மான முனியே மறைநாலுங் கற்றவனே
ஓநமோ வேதம் ஓயாம லோதுவோனே
பின்முன் நின்று இயம்புரைகேட் டேயுரைநீ
நான்தவ சிருக்க நாடுரைநீ மாமுனியே
மான்தவ சுக்குகந்த மாமுனியே என்றுரைத்தார்

கலைமுனி தவசுக்குகந்த இடத்தின் சிறப்புக் கூறல்

விருத்தம்

வெள்ளா சனத்தில் விரைவா சியைநிறுத்திக்
கள்ளமா னதையகலக் காடகற்றி-விள்ளரிய
வெள்ளமாங் கருணைபெறு வேதமுக மாமுனியே
உள்ளதெனக் கின்னதென் றுரை

விருத்தம்

பூரணத்தி னாடி புகழ்ந்துமுனி கொண்டாடி
வாரணத்தின் கோடுவரை தேர்ந்து-காரணத்தின்
கட்டுரைத்து நாடுவளம் விட்டுரைப்பே னென்றுமுனி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10111 - 10140 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

துற்கலிபோ லாகிச் சுற்றுக் குலைந்துதென்றும்
கொண்டாடி நல்ல கூளி கணங்கள்சொல்லிக்
கண்டா ருடனேயும் கைதொழுத மனுவோடும்
இன்றுமுத லெங்களுக்கு எற்கும்வகை யில்லையேகாண்
கண்டுகொள்ளுங் கோவெனவே கண்காட்டிப் போய்மறைந்தார்

விருத்தம்

நானில மரசு ஆள நாரணர் பெற்று வாறார்
தானித மான அன்பாய்ச் சகலருங் கேட்டுக் கொள்ளும்
மாநிலத் தோரே யென்னை வருந்தியே தேவ வேண்டாம்
நானினிச் செய்ய ஆகா நவின்றவர் தெய்வம் போனார்

விருத்தம்


தேயவங்க ளுலகி லெல்லாம் தெரிசனங் காட்டிக் காட்டி
மெய்வரம் புள்ளோ ரெல்லாம் மேதினி விட்டுப் போந்தார்
பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றிய வகையா ராமல்
மெய்மறந் துரைகள் சொல்லி மேதினி யொழித்தா ரென்றே

வைகுண்டர் பகவதிக்கு அருளல்

நடை

கண்ணான நாதன் கமலக் குருநாதன்
வண்ணமுள்ள நாதன் வழிநடந்தா ரம்மானை
நடந்து பகவதியாள் நல்லகட லும்பார்த்துக்
கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்து
நன்மை யுடைய நாயகியே சுந்தரியே
பொன்மோ கினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக் குள்ளான
உய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனென
எந்தன் திருச்சம் பதியு மிதுமுதலாய்
எந்தெந்த நாட்கும் இனிக்காணிக் கைநிறுத்தல்
ஆனதினால் நீயும் ஆதியி லென்னோடு
தேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால்
உன்னோடு இத்தனையும் உபதேச மாயுரைத்தேன்
பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க
என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார்
அன்று பகவதியாள் அறைக்குள் ளடைத்திருந்தாள்

வைகுண்டர் மணவைப்பதி ஏகல்

நாரா யணரும் நல்லசங்கத் தாருடனே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10081 - 10110 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கடல் விளைவெல்லாம் வைகுண்டர் பதம்பணிதல்

முத்துக்கள் சங்கு முன்வந்து தெண்டனிட்டு
வத்துப் பெரிய வைகுண்ட மன்னவரே
இத்தனை நாளும் இயல்கலிய னேதுவினால்
சற்றும் வெளிகாணாதே சமுத்திரத்தி னுள்ளிருந்தோம்
தர்மப் பெருமானே சாமிநீர் வந்ததினால்
நன்மை யுடனாங்கள் நாட்டிலே வாறோங்காண்
ஒருசொல் வரைக்கும் உவரியிலே வாழ்ந்திருங்கோ
இருசொல் லாகுமட்டும் இங்கிருங்கோ என்றுரைத்து
நடந்து வைகுண்டர் நாடி மிகவரவே
கிடந்த நிதியும் கீழ்க்கிடந்த காசுகளும்
ஒக்க உயரவந்து உளமகிழ்ந்து தானிருக்கும்
திக்கென்று நாதன் சேடன் தனையழைத்து
கயிலாசந் தன்னைக் கட்டாய் வரவழைத்து
ஒயிலாக இத்தனையும் உள்ளேநீ கொண்டுசென்று
காவல்செய்து கொள்ளு கயிலாச மென்றுரைத்தார்
தேவன் சட்டமிட்டுத் தெச்சணம் போகவென்று
நடந்தார் துரிதமுடன் நாரணனார் தெச்சணத்தில்
நல்லநா ராயணரும் நாடி வழிநடக்க
வல்ல பெலமான மாமுனிவ ருங்கூடி
எல்லோருங் கூடி இயல்வா ரிக்கரையே
நல்லோர்க ளாக நடந்தார்கா ணம்மானை
வாதையே யானதெல்லாம் வைகுண்டர் பாதமதை
சீதமுடன் போற்றித் தீபரணைக் காட்டிவரக்
காட்டுகின்ற தீபமெல்லாம் காணாத வர்போலே
நாட்டுக் குடைய நாரா யணர்நடந்தார்

நல்ல குலதெய்வங்கள் மறைதல்

நல்ல குலதெய்வம் நாட்ட மதையறிந்து
எல்லைக் குடையை ஈசர்வந் தாரெனவே
இன்றுமுதல் வம்பருக்கு இயல்பகைதான் சூழ்ந்துதென்றும்
நன்று மனத்தோர்க்கு நல்லநாள் வந்துதென்றும்
முற்கலியன் சட்டம் முதன்மையின் றுமுதலாய்த்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10051 - 10080 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

வந்து வைகுண்டர் மலரடியைப் பூண்டுகொண்டு
சிந்தர் குலமன்னர் தெய்வப் பெருமாளே
வைகுண்ட ரெப்போ வருவீர் வருவீரென்று
கைகண்ட நிதியும் காணாதார் போலிருந்தோம்
கப்பல்கரை கண்டாற்போல் கண்டோமே யும்மையும்நாம்
செப்பத் தொலையாத திருவடியைப் போற்றிசெய்ய
வாறோங்கா ணும்முடனே வைகுண்டப் பெம்மானே
தாறோங்கா ணெம்முதுகு சாமியுன் பாதமதுள்
என்றிவைக ளெல்லாம் இரங்கித் தொழுதிடவே
நன்றென் றுஅந்த நாரா யணருரைப்பார்
ஒருவிளி பொறுங்கோ உண்மையிது தப்பாது
இருவிளிக் குள்ளே என்னிடத்தில் வந்திடுங்கோ
இருங்கோ முன்னயச்ச இடத்திலே போயிருங்கோ
கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ
அலைய விடாதிருங்கோ அஞ்சுபஞ் சமதையும்
குலைய விடாதிருங்கோ குருநினைவை யுள்ளேற்றம்
என்று அவைகளுக்கு எம்பெருமான் சட்டமிட்டு
அன்று அவைகளையும் அனுப்பி மிக நடந்தார்
நடந்துபல திக்கும்விட்டு நல்லவன வாசம்விட்டுக்
கடந்துசில ஊரும்விட்டுக் கடல்வழியே தானடந்தார்
வரகுண வைகுண்டர் வாரிசுனை பார்த்து
இரசகனிக ளேற்று இரவும் பகல்கடந்தார்
விசைகொண்ட ராசர் விசயா பதிகடந்தார்
வாரிக் கரைவழியே வரவேணு மென்றுசொல்லி
சூரிய புஸ்பத் துலங்கும்க் குறிபார்த்து
வீரிய நாதன் விரைவாய் வழிநடந்தார்
கடலுட் பதிகள் கண்டுகண் டேநடந்தார்
மடமடென அட்டவணை வாரிதீர்த் தாமாடி
கடற்பெம்மான் வாறார் காணுவோ மென்றுசொல்லித்
திடமுடனே வாரி சென்றுகண்டு தான்தொழவே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 10021 - 10050 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அப்போது பூதமதை அல்லகா ணென்றுசொல்லி
மைப்போடுங் கண்ணர் மாபூத மதைவிலக்கி
நீங்களெனைச் சுமந்தால் நீணிலத்துச் சோதனையில்
தாங்கள் மீறிநடந்தால் தகுமோநான் கேட்பதற்கு
வேண்டாங்காண் நாரணர்க்கு வேதாளா வுன்வேலை
பாண்டவர்க ளானப் பஞ்சவர்க ளுண்டெனக்கு
என்று வைகுண்டர் இசையத் திசைநடந்தார்
தொண்டு செய்யாமல் சூல்பூத மாடிவரப்
பூக்கொண்டு வந்து போட்டுத் தொழுவாரும்
தீக்கொண்டு வந்து தீபரணை காட்டுவாரும்
மலர்வீசிக் காற்று மரைவீசி நிற்பதுவும்
சிலம்பொன் துளிபோல் சிறப்புடனே தூவிவர
மதியுங் குடைபிடிக்க வாயு மரைவீசத்
துதியும் வழிதீய்க்கத் தேவர்மிக வோலமிட
இத்தனை நற்சிறப்பும் இயல்பாய் முழங்கிவரப்
புத்தியள்ள நாரணரும் புறப்பட்டார் தெச்சணமே
நதியிற் பிறந்த நாரா யணமூர்த்தி
பதியி னலங்காரம் பார்த்து வழிநடந்தார்
கெங்கை தனிற்பிறந்த கிருஷ்ண மகாநாதன்
கங்கை வழிநோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்

வெண்மை உயிரினங்கள் வைகுண்டரைப் பணிதல்

நடந்து வருகும் நல்லவை குண்டர்முன்னே
கடந்து முன்போன காண்டா மிருகமொடு
சிங்கமி யாளி செங்கருட னங்கனுமன்
பங்கமிலா றாஞ்சி பால்நிறப் பட்சிகளும்
ஐந்தலை நாகம் அஞ்சுபஞ் சாச்சாரை
செந்தலைக் கருடன் செய்யகாண் டாமிருகம்
கலியன்கண் காணாதே காடோடி வாழ்ந்திருந்த
சலிவில்லா மாமிருகம் சந்தவர்ணப் பட்சிமுதல்
தரும வைகுண்டர் தான்வந்தா ரென்றுசொல்லிப்
பொறுமைக் குலங்களெல்லாம் புறப்பட் டகமகிழ்ந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9991 - 10020 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்துமிக
என்னடையில் வந்து ஏந்திழையா ராடுவது
ஆட வரும்போது அசுத்தத்தோ டுவாறாள்
பாடவரும்போது பண்ணுறா ளசுத்தமது
கோவிலிலே பூசைசெய்யும் குறும்பர் மிகத்துணிந்து
தேவியருக் கீயத் திருடுகிறா ரென்முதலை
கணக்கன்முதல் நம்பூரி கள்ளப்பெண் ணார்களுக்கு
இணக்க மதாயிருந்து என்முதலைக் கொள்ளைகொண்டு
எடுக்கிறார் பெண்கள் எச்சியாட்டு மாடி
ஒடுக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண் ணொத்திருந்து
பம்பை பரத்தை பகட்டுக்கை காட்டலெல்லாம்
எம்பரனுக் கேற்ற இயல்பல்ல மாமுனியே
ஆனதா லிவ்வகைகள் யான்வேண் டாமெனவே
மான மழியுமுன்னே மாமுனியே தெச்சணத்தில்
பள்ளிகொண்டு நானிருந்து பார்த்துச்சில நாள்கழித்துக்
கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தான்முதலாய்
நிறுத்தல்செய்ய வேண்டிய தெல்லா மிகநிறுத்திப்
பொறுத்தரசு தர்மப் புவியாளப் போறேனினி
மாமுனிக்குச் சொல்லி வழிகொண்டார் தெச்சணமே
தாமுனிந் தையா தவறாத மாமுனியும்
தெச்சணத்துக் கேகவென்று திருச்சம் பதியிருந்து
உச்சமது கொண்டு உகச்சாப முங்கூறி
நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக்
கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம்
சங்கீதங் கூறித் தாமே யவர்வரவே
மங்கள நாதன் மனுச்சொரூப மேயெடுத்து
நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார்
மருட்கள் மிகவந்து வாசமிட்டுக் கூடிவர

பிசாசுகளின் பணிவிடையை மறுத்தல்


கீழநடை விடாமல் கிருபையுள்ள வைகுண்டரைத்
தாழநடை விடாமல் சற்பூத மேந்திவர

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9961 - 9990 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்னைக் கெணியாமல் என்கோவி லுள்ளேதான்
சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட் டெச்சியிட்டான்
இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோ
ஒருவன் பெண்ணானை ஒருநம்பூ ரிபிடித்து
எனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில்
மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்து
இழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்று
பழுத்துச் சழிந்த பருநம் பூரியவன்
மேல்தலையி லிட்ட முத்திரி கழற்றாமல்
மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூரி
மங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக்
கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்து
வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று
மோதி யென்பேரில் ஒருசாபங் கூறினளே
நாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக்
காரணங்க ளாச்சு கடைசிநாள் தானாச்சு
உனக்குமிந் தப்பதிதான் உறவுகே டாச்சுதையா
எனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்று
செந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னே
மண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச் சாபமிட்டாள்
சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து
சீவ னதுவிடவே சிவனைக்கண் ணோக்கினளே
நம்பூரி பங்கத் தாலேயந்த நாயகியும்
உம்பர்கோ னூரில் உயிர்விட்டாள் மாமுனியே
தவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால்
இதறா யெனக்கங்கு இருக்கமனங் கூடாமல்
எங்கேயினிப் போவோமென்று இதைவிட் டெழுந்திருந்து
மங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலே போயிருந்தேன்
அல்லா மலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்ப
வல்லாண்மை யாக வலுஞாயங் காணுதுகாண்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9931 - 9960 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மனுக்கண் காண வரவேண்டீ ரென்பிறகே
தனுக்கான ஏகமதில் சகலத்தோ ருமறிய
வாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களே
பாருங்கோ தேவர்களே பாங்காக எப்போதும்
வானமதில் நின்று வாத்தியங்க ளேற்றிவர
தானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே
ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவர
வாகான சூரியனும் வந்து குடைநிழற்ற

செந்தூர் விட்டு வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல்


நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும்விட்டு
வண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டு
சோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள்விட்டு
ஆலைத் தெருக்கள்விட்டு அந்தூர் பதிகள்விட்டு
மண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்து
தண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்கு
நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர்
நக்கன் மருகனுட நல்லடி யில்வீழ்ந்து
செந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணா பூமியிலே
இந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன்
இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமே
சங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார்
அப்போது நாரா யணர்மகிழ்ந் தேதுரைப்பார்
இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக் கேளுமினி
கேள்விகே ளாநீசன் கெடுவ தறியாமல்
நாள்வழியாய்ச்  சான்றோரை நியாயமில் லாதடித்தான்
சொன்னேன்புத்தி நீசனுக்குத் திருவனந்த மேயிருந்து
என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை
ஆனதால் நீசனுக்கு யானதிகக் கோபமிட்டு
நானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூரு
இங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம்
வெங்கப் பயல்சிலர்கள் வேசையுட னாசையினால்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 9901 - 9930 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விருத்தம்

பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக்
கண்டுவரும் பலவாங் கிரி குண்டமே
பசுவாமனே சிசுபாலனே பலமானனே
தலமானனே பசுவா கிய நிசமே

விருத்தம்


தொண்டர்தனக் கென்றுவரு குண்டவை
குண்டமனாய்த் தெச்ச ணாபதி பூபனே
துளபமணி களபமேனி யழகொழுகு கிருபைமிகு
துவாரகா பதிக் கரசேயென தொழுது

விருத்தம்

சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை
விண்டத்தொடு துச்சா வில்லு வீரா
சாமியுன் றாளோ எங்கள் தலையின்மீது
தலையின்வழி தானே நடவாயே

விருத்தம்

துண்டப்பட வண்டச்சரம் கண்டப்படி
பொண்டத்தொடு துச்சா வில்லு தீரா
சுத்தாவுனக்கேற்றார்தமை வித்தானதில்
வித்தாய்துவாரகாபதிக்கரசேயெனத் தொழுதார்

நடை


தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவரத்
தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவர
வேத மறையோர்கள் வேதக்கலை யோதிவர
நாதமொடு சங்கு நகரா முழங்கிவர
மத்தள மேலோர் மடமடென் றேற்றிவரத்
தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவரச்
சாத்திர வேத சாதிமுறை யோதிவர
நால்றிசையும் போற்றி நாற்சாதி யும்வரவே
அரம்பையர்க ளாடி ஆலத்தி யேந்திவர
வரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவர
நாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவர
மாதவர்க ளெல்லாம் மலர்மாரி தூவிவர
கண்டங் ககமகிழ்ந்து கண்ணான நாரணரும்
கொண்டாடித் தேவரொடு கூறுவா ரன்போரே

விளக்கவுரை :   
Powered by Blogger.