அய்யா வைகுண்டர் பண்டாரமாக காட்சி அளித்தல்

வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது.

நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர் நடக்கும் கலியுகத்தை அழித்து பேரின்பநிலையான தர்மயுகத்தை மலரச்செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய "தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது.

சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது.



அய்யா வைகுண்டர் மந்திர தந்திர முறைகளை திரும்பப்பெறுதல்

பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது.

மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை வைகுண்ட சுவாமி என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார்,

"பொய்யில்லை பசாசில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமில்லை
தொய்வில்லை இறைகளில்லை சுருட்டும் மாஞாலமில்லை
மையில்லை உலகத்தோரே வாழும் ஒரு நினைவாலென்றார்"



அய்யா வைகுண்டரின் தவம் மற்றும் தீய சக்திகளை ஒடுக்குதல்

தெட்சணம் எனப்படும் பூவண்டன் தொப்பை (தற்போதய சுவாமி தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

"முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே
மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும்
நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார்.

அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன.

"உகசிவ வானோர் எல்லோரும் போகரிது
வகையுடன் நாந்தான் செய்யும் வழிதனை பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாய் இங்கே இரும் எனச் சொல்லிவைத்துப்
பகைசெய்த கழிவை எல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்"

அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது.



அய்யா வைகுண்டர் பூமியில் மனு அவதாரம்

1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது. முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய ஐந்து யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட்டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும்.

மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடைவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது. ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார்.

இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரனத்தினால் அவதாரம் மூன்று நிலையில் நடக்கிறது.


  • அவதாரத்தின் முதல் நிலை, இறந்து பிறக்கும் குழந்தை (தூல உடலின் பிறப்பு).
  • இரண்டாம் நிலை, தூல உடலில் செலுத்தப்படும் சம்போரணாதேவன், சுமக்கும் நாராயணரின் சூட்சும உடல்.
  • அவதாரத்தின் மூன்றாம் நிலை, 24 வருடங்களிக்கு அப்பால் சம்போரணதேவனுக்கு முக்தி அளிக்கப்பட்டு, அவ்வுடலில் ஏகம் உலகில் அவதரித்து வருவது.


இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல், நாராயணரின் சூட்சும உடல், ஏகம் என்னும் காரண உடல், இவை மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார். எனவே புதிதாக பிறந்த வைகுண்டக் குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது.

பின்னர் முருகனுக்கு சட்டம் வைத்த பின்னர் ஏகப்பரம்பொருள், நாராயணரை உட்படுத்தி, வைகுண்ட அவதாரம் கொண்டு கடலின் மேல் வந்து தருவையூர் என்னும் இடத்தில் மனித உடல் (பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியரின் மகன்னான முத்துக்குட்டியின் உடல்) எடுத்து பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார்.

ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல, ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான், ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவார் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு காரணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே.
Powered by Blogger.