அகிலத்திரட்டு அம்மானை 14941 - 14970 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில்
சடைவில்லா தேமகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார்
நன்றாக நாரணரும் நாடும்மட வார்களுமாய்
ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில்
பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே
கற்றைக் குழலார் கனமான தேவியரை
ஏக மறிய இசைந்த மணம்புரிந்து
வாகாபரனும் மகிழ்ந்திருந்தா ரம்மானை
அய்யோவைகுண்டர் ஆதிவுரரைத்தபடி
இப்போதொரு சொரூபம் எடுத்துநாம்  போகவென்று
அன்றுயணிந்தாடும் ஆதிவுரு உள்ளடக்கி
மனிதாவர வடிவை மிகவெடுத்து
ஆராதனையாய் அவரொரு ஆட்டமாடி
சீரான சான்றோர்க்குச் சொல்லுவார் வைகுண்டரும்
நன்றுமக்கா இன்று நாமெல்லோரும்கூடி
பண்டுநாம் தவசிருந்த பதிதாமரையூரில்
இன்றுபோக விஞ்சையுண்டு என்கூடவாருமென்றார்
அன்றுமுலப்பதியைவிட்டு ஆதிச்சான்றோர்களெல்லாம்
ஒன்றாகக்கூடி உடையோன் பின்னேநடந்தார்
நன்றுகடற்கரை வழியே நடந்து வருகையிலே
காட்டிலொரு குதிரை கண்டு அய்யாவைப்பணிந்து
நாட்டுக்குவாரேன் நடந்துஉம்மோடுவென்று
முத்திமுகந்துகொண்டு முதுகுகொடுத்திடுமாம்
சித்தமுடனேறி சிலதூரம்வருகையிலே
அந்தரதேவாதி எல்லோருந்தான்கூடி
சிந்தினார்மலரைச் சிவவைகுண்டர் பாதமதில்
தவசிருந்த தாமரைப்பதியூரில் வந்திருந்தார்
மூவர்மொழிந்த மூலப்பதி விஞ்சையைப்போல்
இனியிந்த இவ்வுகத்தில் ஆசையத்த கோலமதைத்
தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14911 - 14940 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

பாலரான பெண்ணும் பாவையர்கள் பெற்றுமிகக்
கோலமுடன் வாழ்ந்திருந்தார் கூண்டரிய செல்வமோடு
பாக்கியங்கள் ரெம்பப் பவிசு குறையாமல்
நோக்கியல்பாய் மாதர் நுண்ணிமையாய் வாழ்ந்திருந்தார்
நாராயணர்க்கு நல்லமுது தான்படைத்து
காரணரு மமுது கலந்துமிக வுண்டிருந்தார்
கூடி யிருந்து குலாவி மிகவாழ
நாடி மகிழ்ந்து நாரணருந் தேவியுமாய்
வாழ்ந்திருக்கும் நாள் மங்கை பகவதியாள்
சேர்ந்தகுழலணையாள் தேவியவள் தோழியர்கள்
இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில்
திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல்
காணாமல் தேடிக் கானகங்க ளும்பார்த்து
வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில்
பதியில் பகவதியைப் பண்பாகப் பார்த்தவர்கள்
விதியுனக்கோ அம்மா வெயிலுகந்த மாதாவே
நீயிருந் தப்பதிதான் நிதானம்போ தாதெனவோ
நீயுமிந் தப்பதியை நினைத்துவந்த வாறேது
அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி
இப்போ நமக்கு எழுத்தின் படியாலே
நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூ டாதினிமேல்
கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே
தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன்
மலையு தெளிந்து மாதே யென்தாய்மாரே
எங்களுக்குத் தாயே இனியாரு நல்லதுணை
சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே
மாதே யென்தோழியரே மன்னருக்கு மென்றனக்கும்
தீதேது மில்லாத் தேசத் திருப்பதியில்
நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமன்று
அன்றந்தத் தோழியர்க்கு அருளி விடைகொடுக்க

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14881 - 14910 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கந்தனுடதேவி கனத்ததெய்வானைதனை
இந்தவேளைக்கூட்டி இங்குமணஞ் செய்யவென்று
மாயவரும் கந்தனென மாயவுருவெடுத்து
வேலும்பிடித்து வெண்ணீறும் தான்பூசி
மேளத்தொனியுடனே மேலோர்கள் போற்றிநிற்க
தாளமில்லார் சரமண்டலம் முழங்க
வாசவனும்தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க
தேசநரிளறியத் தெய்வமடவாரறிய
கட்டினார்தாலி கனதெய்வானையர்க்கு
மட்டில்லாதேவர் மனமகிழ்ந்து தாமிருக்க
மாலையிட்டுநாதன் மனைச்சடங்குதான்முகித்து
மூலக்குண்டப்பதியில் முகுந்தனுமே தாமிருந்தார்
ஆகமத் திகனை அலங்கிருத மேப்புரிந்து
நாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலே
கந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ் செய்யவென்று
சிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்து
கேட்டுநருள்விட்டு கிளிமொழியைத் தான்வருத்தி
கோட்டு வரையான கோதைவள்ளி நாயகியைக்
கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து
எந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியை
மாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமே
வேலையிட்டம்மானை வேண்டுஞ் சடங்குசெய்து
நாளிட்டு வந்து நாளேழு மேகழித்து
வாழட்டு மென்று வாய்த்தசடங் குமுகித்து
மாதரோ டெல்லாம் மகிழ்ந்திருந்தா ரம்மானை
தாரணியோ ரறிய தான்வாழ்ந் திருந்தனராம்
பெண்ணார் தமக்குப் பேர்பெரியத் தற்சொரூபம்
கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார்
வாழ்ந்திருக்கும் நாளயிலே மங்கை தெய்வ மாதர்களில்
ஏந்திழையில் சிலர்கள் இளங்குழலி பெற்றனராம்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14851 - 14880 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மட்டுப் பருவமுள்ள மாதர் மனைபுகுந்து
விளையாடி நீயும் வேறா ரறியாமல்
குழைவாய் மதலையெனக் கூண்டதொட்டி லேகிடந்து
சிறுகுழவி போலே சீறி மிகஅழுவாய்ப்
பருவதங்க ளுமெடுப்பாய்ப் பாலன்போ லேகிடப்பாய்
உன்சூட்ச வேலை உரைக்க எளிதாமோ
தன்சூட்ச மெல்லாம் தானுரைக்கக் கூடாது
பலவேசங் கொண்டு பார்முழுதுஞ் சுற்றிடுவாய்க்
குலவேசம் நீரும் கொண்ட தொழிலல்லவோ
ஆரோடுஞ் சொல்லி அதட்டிவிட வேண்டாமே
பாரோ டுதித்துவந்த பாவையொடு செல்லாது
என்றுமண்டைக் காட்டாள் இசைந்தமொழி தான்கேட்டு
நன்றுநன்று பெண்ணே நமக்கிதுவே ஞாயமுறை

மண்டைக்காட்டம்மை திருக்கலியாணம்

பெண்ணேயுன் றன்பேரில் பேராசை ரெம்பவுண்டு
கண்ணே யுனையிப்போ கலியாணஞ் செய்வதற்கு
வேளையி தாகும் மெல்லியரே யென்றுரைக்க
வாளதிய மங்கை மனதயர்ந்து வாய்குழறித்
தலையி லெழுத்தெனவே சத்தமுரை யாடாமல்
சிலைதாள்நுதலாள் சொல்லுரையா தேயிருந்தாள்
இருந்த நினைவை ஏகமூர்த்தி யறிந்து
பொருந்து மதியானப் பிரமாதி வேசமதாய்
வேச மெடுத்து மேளத் தொனியுடனே
வாசவருந் தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க
தேச நருளறியத் தெய்வமட வாரறிய
மாய பரனும் மகாபெரிய நூல்முறையாய்
வாசக் குழலாளை மாலையிட்டா ரம்மானை
மாலையிட்டு நாதன் வாய்த்தசடங் குங்கழித்துச்
சாலையத் துள்ளேகித் தானிருந்தா ரம்மானை

வள்ளி திருக்கல்யாணம்


மணமுகித்து நல்ல மணவறையக லுமிருந்து
துணைபெரிய மாயன் சுருதி முறைப்படியே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14821 - 14850 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

என்றுமா தேவி இப்படியே சொன்னவுடன்
ஒன்றுமறி யாதவர்போல் உள்ளந் தனிலடக்கிப்
பெண்ணே நானிந்தப் பெருங்கலியைத் தான்முடிக்கக்
கண்ணான பெண்ணரசி கரிய சொரூபமது
எடுத்திகனை கூத்து யானிங்கே யாடுறவன்
முடுத்துந்த னூரில் முறைமயக்க வந்தேனோ
எனக்குப்பெண் ணில்லையென்று இரந்துகொள்ள வந்தேனோ
தனக்கிதுவோ ஞாயம் தரணியது சொல்லாதோ
நாமிருப் பிங்கே நாமமெங்குங் கேட்குதல்லோ
சோமவா ரமணிந்த சுவாமியுட கற்பனையோ
என்று பெருமாள் இதுமொழிய மாதுசொல்வாள்
குன்றெடுத்த மாயக் கோபாலா வுன்சூட்சம்
எவரா லளவெடுக்க ஏலுங்கா ணுன்மாயம்
கவராயிரங் கோடிக் கருத்திருக்கு மாயவரே
இராமனாய்த் தோன்றி இராவணசங் காரமது
சிராமர் படைவகுத்துச் செய்யம்பு கைப்பிடித்துப்
போரில்நீர் நின்று பெருதுகின்ற வேளையிலே
மேரு குலுங்கி விண்தூள் மிகப்பறந்து
ஆகாயத் தேகி அந்தரங்க மேகமதில்
தூள்மூடக் கண்டு தேவர் மீகப்பதறி
வேழதிய உன்போர் மிகுதேவர் பார்க்குகையில்
போரிலும்நீர் நின்றுப் பொருது சரம்விளைக்க
வாரியிலும் பாம்பணையில் வாய்த்தபள்ளி கொண்டீரே
ஆய்ப்பாடி ஆயர் எல்லோருந் தாங்கூடிச்
சாய்ப்பானப் பேய்களுக்குச் சருவில் கொடைகொடுக்கப்
பேயையெல்லா மோட்டி பெரும்பூத மாயிருந்து
ஆயர்கள் பார்த்திருக்க அங்குபூ சாரியுமாய்த்
தின்றாயே யத்தினையும் சிலபூத மாயிருந்து
மன்றுதனில்நீயும் மாயன் என இருந்தாய்
தொட்டிலா யர்மனையில் சிறுபிள்ளையாய்க் கிடந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14791 - 14820 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

கும்மி யடித்துக் குரவை மிகக்கூறி
எம்வடிவு போலே ஏலங் குழலார்கள்
ஆடிப் பாடி அலங்கிருத மாகியவர்
சாடிக் குலாவி சனங்கள்வெகுக் கூட்டமுடன்
பாலு பழமருந்திப் பாவிக்கும் பாவனையை
மேலுக் குகந்தவளே விடுத்துரைக்கக் கூடாது
என்றுரைக்க அந்த இளவரசிக் காட்டாளும்
அன்று மதிமயங்கி ஆயிழையாள் மாய்கையொடு
கூடி நடந்து கூண்டரிய நற்பதியில்
ஆடிக் களிக்கும் ஆதியிகனைச் சுபையில்
வந்தாளே மாய்கை மண்டைக்காட் டாளுடைய
சிந்தை யதற்குள்ளே சென்று மிகவிருந்து
திக்குத்திசைகள் தெரியாமல் தான்மயங்கி
பக்குவ மாது பறிகொடுத்தப் பேர்களைப்போல்
புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலே
வலம்புரிக்கண் மாயன் மாதை மிகவருத்தி
மணமுகிக்க வென்று மாயன் மனதிலுற்றுக்
கணமுடைய மாயன் கூண்டுமுன் மாலையிட்டப்
பகவதிக்குள் சேர்த்துப் பாரமணஞ் செய்யவென்று
சுகபதியா ளந்தச் சோதி பகவதிக்குள்
உள்ளாக்கிக் கொண்டு உற்ற திருச்சபையில்
துள்ளாட்ட மாகித் தொகுத்தகாண் டம்படித்தாள்
வையகத்தோர் காண வாழும் பகவதியாள்
செய்யமண்டைக் காட்டாள் சிறந்தகாண் டம்பிடித்தாள்

மண்டைக் காட்டம்மை காண்டம் படித்தல்

அய்யோநான் கண்மயக்காய் அங்கிருந் திங்குவரப்
பொய்யோ வொருமாய்கைப் பெண்ணாக வந்ததுதான்
இங்கே யிவர்போலே இருந்ததுகாண் வந்தபெண்ணும்
சங்கை நமைக்கெடுக்கச் சமைந்தாரே பெண்ணாகிப்
பெண்ணாய்ச் சமைந்து பேராசையு மருளிக்
கண்ணான என்றன் கற்பு மழிந்தேனே

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14761 - 14790 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

காதுக்குத் தோடணிந்து கைக்கு வளையணிந்து
மார்பில் வடமணிந்து வாய்த்ததண்டைக் காலிலிட்டுச்
சேலை யுடுத்துச் சிவந்தகொசு கமுடித்து
மாலை யணிந்து மார்பில் கலையணிந்து
கோர்வை யணிந்து குழலு மிகமுடித்துத்
தோர்வை படாதே தோகையென வேசமைந்து
மஞ்சணையும் பூசிபிச்சி மாலை மிக அணிந்து
செஞ்சொல் மதனைச் சிந்தைக்குள் ளேயிருத்தி
எடுத்தார் பெண்ணாக எம்பெருமாள் கோலமது
கடுத்தகன்னி மார்கள் கன்னிக் கணவரென்று
சொல்லி மகிழ்ந்து தோழிநா மென்றுசொல்லி
முல்லையணி பெண்ணார் முகுந்தன்பதந் தொழுவார்
நாட்டி லுள்ளோரும் நாரணர்பெண் ணானாரென்று
தாட்டிமையாய்ப் போற்றி சரணம் பணிந்துநிற்பார்
இப்படியே வேசம் எடுத்துத் திருமாலும்
பொற்படியில் வாழும் பொன்னுமண்டைக் காட்டாளை
மயக்கிக் கொடுவரவே மாமோகப் பெண்ணேவ
இச்சொரூபம் போலே ஏந்திழையாள் கண்ணிலொரு
சச்சு ரூபமாகத் தான்கண் டுரைபகரும்
பெண்ணேயென் னக்காள் டுரைபகரும்
பெண்ணேயென் னக்காள் பேர்பெரிய நாயகமே
கண்ணே யென்மாமணியே கனகவொளி மாதவமே
கலியுகத்தி லேபெரிய கண்காட்சை தன்னுடனே
வலிதான நல்ல வாய்த்த பதிச்சிறப்பும்
நித்தந் திருநாளும் நீலமணி மண்டபமும்
சிற்றம் பலமும் திருநாள் சிறப்புடனே
சத்தகன்னி மாரும் தண்டரள மாதுமையும்
புத்தியுள்ள பார்வதியும் போர்மகள் பகவதியும்
கங்கை மடவாரும் காட்சி மிகப்புரிந்து
கொங்கை மடவார் கூடி மிகப்புரிந்து

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14731 - 14760 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

மனதயர்ந்து மாதர் வாயுரைக்கக் கூடாமல்
தனதுள முகங்கோடி தலையில் விதியெனவே
நின்றார் மடவார் நினைவு தடுமாறிப்
பண்டார மாகப் பரமன் வடிவெடுத்துத்
தாலி மிகத்தரித்தார் தாமனந்தப் பெண்ணார்க்கு
ஆலித்துப் பார்வதியை அரவியுட னீராட்டி
சந்தோ சமாகத் தாலி மிகத்தரித்தார்
வெந்தோசந் தீர்ந்து மேலோர்கள் கொண்டாட
வையகத் தோரும் மனமகிழ்ந்து கொண்டாட
செய்யத் திருமால் செய்சடங்கு கள்முடித்து
வாழ்ந்திருந் தார்பெண்களுடன் மாய பரநாதன்
தாழ்ந்திருந்து மடவார் சரண மிகப்பூண்டு
பூண்டு பணிவிடைகள் பூவையர்கள் செய்துமிக
வேண்டும்பல பாக்கியத்தோ(டு) இருந்துமிக வாழ்ந்தார்
இப்படியே பெண்களொடு இருந்துமிக எம்பெருமாள்
நற்புடைய தேர்திருநாள் நாளுங் குறையாமல்
செய்து இகனை சிவசோ பனம்புரிந்து
வையமூலப்பதியில் வளமாக எல்லோரும்
மைதவழை மாதரோடு பண்பாக வேயிருந்தார்
மாதருக்கு மாதவனாய் வானோர்க்கு நாயகமாய்த்
தாரணிக்கும் நாதனெனத் தான்வாழ்ந் திருந்தனராம்
வாழ்ந்திருக்கும் நாளில் மாதுகன்னி மார்களோடும்
சேர்ந்திருக்கும் நாளில் திருமால் மனமகிழ்ந்து
கூர்ந்தொரு தேவி குவிந்தமண்டைக் காட்டாள்க்கு
சோபனங்கள் கூறி சுத்தமங்க ளம்பாடி
மேவரசி யான மெல்லியரை நாமணந்தான்

மோகினி வேடம்

புரிவதற்குக் கோலம்புகழ்ந்தணிய வேணுமென்று
மதிபெரிய மாதை மயக்கமிகச் செய்திடவே
மாதுக்கு நல்ல மகாவிருப்ப மானதொரு
சீருகந்த மாதரென செம்பவள மாயவரும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14701 - 14730 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அன்னங்காய் வைத்து அமுதருந்து மென்றுசொல்லி
முன்னிங்கே வந்து முத்தமது தாரீரோ
வாழை பழங்கனிகள் மாம்பழம் பாலக்கனிகள்
கூழனைய சந்தனமும் கொண்டுவந்து தாரீரோ
கண்ணரிய பெண்ணுகளே கள்ளமில்லா தோவியங்காள்
பெண்ணரிய மாமயிலே பிள்ளா யென்கண்மணியே
எண்ணுஞ் சிறுபிள்ளையாய் இருக்குமென்றன் பார்வதியே
கண்ணு மயிலே கைக்குள்வந்து சேராயோ
என்றுபர நாதனுமோ இவ்விசைகள் தான்கூற
மன்றல்குழ லுமையாள் வாய்த்தகுலப் பார்வதியாள்
வந்துதிருப் பாதமதில் மாகோபமாய் மகிழ்ந்து
முந்து மொழியெல்லாம் மொழிந்தாரே மாதரவர்
அய்யோஈ  தென்ன அடிமாறு காலமதோ
பொய்யோ கலியன் பிறக்கப்போய் நாங்களெல்லாம்
இப்பா ருலகில் இப்படியே வந்ததென்ன
முப்படியே யுள்ள முறைநூற் படியாலே
பொல்லாக் கலியுகந்தான் பொடிப்பட்டுப் போறதற்கோ
வல்லாத்த மங்கையெல்லாம் மாகலியில் வந்ததுதான்
என்றந்த மாதர் இதுகூற மாயபரன்
நன்றென்றன் மாதர்களே நாம்நினைத்த துபோலே
வந்தீரே யின்று மணம்புரிய வேணுமென்று
புந்தி யயர்ந்து பூவை முகங்கோடி
அண்ணர்நா ராயணரும் அவனிதனில் வந்தாரென்று
பெண்ணரசி நாங்கள் போய்ப்பார்க்க வேணுமென்று
வந்தோமே யென்னுடைய வரம்பெரிய அண்ணரென்றாள்
பிந்தாமல்மாயன் பேசுவார் மங்கையுடன்
அண்ணரது நீயென்றாய் ஆயிழையே யிவ்வுகத்தில்
இண்ணதுவே இப்படித்தான் என்னுடைய நாயகமே
மன்றல்செய்ய நானும் மகாவிஞ்சை பெற்றுவந்தேன்
என்றுசொல்ல நாரணரும் ஏதுசொல்வாள் பார்வதியும்

விளக்கவுரை :   

அகிலத்திரட்டு அம்மானை 14671 - 14700 of 16200 அடிகள் 

akilathirattu-ammanai

அந்தந்தப் பெண்களுக்கு அழகுசொரூ பம்வேறாய்ச்
சொந்த விளையாட்டுத் தோகையரோ டாடினராம்
ஆடித் திருநாளும் ஆனந்தக் கும்மிகளும்
நாடி யுகத்தீர்ப்பும் நல்லமக்க முக்கறிவும்
சொல்லி யாமங்கூறிச் சோபனங்கள் தான்பாடி
நல்லியல்பாய் நாதன் நடத்தி வருகையிலே

பார்வதி திருக்கல்யாணம்


ஈசுரனுக் கேற்ற ஏந்திழையாள் பார்வதியை
வீசுபுகழ் மாதுமையை வெற்றிமண்டைக் காட்டாளை
மாமணங்கள் செய்ய மனதிலுற் றெம்பெருமாள்
பூமணங்கள் னானப் பொன்னுநல்ல பார்வதிக்கும்
மங்களங்கள் கூறி மாதை மிகநினைத்துத்
திங்கள் சடையணிந்து சிவவேட முந்தரித்து
மாத்திரைக் கோல்பிடித்து மார்பில்தா வடம்பூண்டு
காத்திருந்து பார்வதியைக் கருத்தாய் நினைக்கலுற்றார்
மாதுமைக்கு மங்களங்கள் மயேசு ரன்கூற
சீதுகந்த மாதுகளைச் சிவனு மிகநினைத்துக்
கருத்தா யிருந்து காண்டமது சொல்லியவர்
உருத்தா யிருந்து ஓதுவார் மோகமதாய்ப்
பெண்ணே யென்பார்வதியே பேரான மாதுமையே
கண்ணே யென்பார்வதியே கனகவொளி ரெத்தினமே
கூட்டுக் கிளியே கொடியிடையே நிங்களெல்லாம்
நாட்டிலென்னை விட்டு நன்னகரில் வாழ்வீரோ
தனியேநான் வந்திருந்து தவித்துமுகம் வாடுவது
கனியேயென் மாமணியே கருத்தி லறியீரோ
உள்ளுடைந்து வாடி உங்கள்மேல் காதல்கொண்டு
தள்ளுடைந்து நானிருக்கும் தன்மை யறியீரோ
ஊணுறக்க மில்லை உங்களைநா னெண்ணியெண்ணிக்
கோணுதலாய் வாடி கோடிமுகம் வாடுறேனே
வாரீரோ பெண்காள் வயிறுபார்த் தன்னமிடப்
பாரீரோ என்முகத்தைப் பார்த்திரங்க மாட்டீரோ

விளக்கவுரை :   
Powered by Blogger.